சென்னை:

ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கானது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தேனி அருகே நியூட்ரினோ திட்டமும் செயல்படுத்தப்படும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

இந்த விவகாரங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அனைத்து தமிழக அரசியல் கட்சியினரும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய தமிழக சட்ட அமைச்சர், தமிழக அரசின் உத்தரவை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  செயல்படுத்தினால், அந்த நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கானது, இந்த திட்டங்கள் செயல்படுத்தினால் தமிழகத்தின் வளர்ச்சி நிலையாக இருக்கும் என்று கூறினார்.

மேலும், இதுபோன்ற திட்டங்கள் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,  குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.