நெடுவாசல்,

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்து அப் பகுதி முழுவதையும் அழிக்கத் துடிப்பது பாஜக எம்.பி. ஒருவரின் குடும்பம்தான் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.  ஆம்..  அந்த குடும்பத்தினரின் நிறுவனம்தான், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தப்போகிறது.

விரிவாகவே பார்ப்போம்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம். இந்த நிறுவனம்,  பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.எம். சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம்தான், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்தும் உரிமத்தை பெற்றி ருக்கிறது.

கர்நாடக அரசியல் வட்டாரத்தில், ஜி.எம் என்ற பெயர் ரொம்பவே பிரபலம். இந்த பெயருக்கு உரியவர், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ஜி. மல்லிகார்ஜுனப்பா. இவர், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சேவகர். பின்னாட்களில் பாஜக உதயமானபோது அதில் இணைந்து செயல்பட்டவர். அக்கட்சி சார்பில் தாவணகரே பாராளுமன்ற தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர்.

ஜி.எம். குரூப் நிறுவனங்களின் பிதாமகன் இவர்தான். ஆரம்பத்தில் பாக்கு ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் அடுத்தடுத்து கல்வி, விவசாயம், சர்க்கரை, மின்சாரம், வங்கித்துறை, நிதி, ஏற்றுமதி இறக்குமதி என்று பல்வேறு தொழில்களில் இயங்கினார்.

ஆரம்பத்தில் பாக்கு ஏற்றுமதி செய்து வந்ததால், பாக்கு ராஜா என செல்லமாக அழைக்கப்பட்டார்.

கர்நாடகத்தில் கணிசமாக வாழும் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்.

இவருக்கு, மொத்தம் 3 மகன்கள், 4 மகள்கள், 14 பேரப் பிள்ளைகள் என்று பெரிய குடும்பம்.

மூன்று மகன்களில் மூத்தவர் பெயர் ஜி.எம். சித்தேஸ்வரா.  அடுத்தவர் ஜி.எம். பிரசன்ன குமார். அதற்கடுத்தவர்  ஜி.எம். லிங்கராஜு. இவர்களில் முதலாவது மற்றும் மூன்றாவது நபர்கள்தான் நெடுவாசல் விவகாரத்தில் முக்கியமானவர்கள்.

சித்தேஸ்வரா, தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது  தாவணகரே தொகுதி பாஜக எம்.பியாக இருக்கிறார். இந்த சித்தேஸ்வரா மத்திய அமைச்சராகவும் இருந்தவர் ஆவார். ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவரை பதவியிலிருந்து நீக்கி விட்டார் மோடி. இவர், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அதி தீவிர  ஆதரவாளர். இவரது தம்பிகள் பிரசன்ன குமாரும், லிங்கராஜுவும் ஜிஎம். குரூப் நிறுவனங்களை பார்த்துக் கொள்கிறார்கள். அதேசமயம், சித்தேஸ்வராவும் தொழில் விவகாரங்களை கவனித்துக்கொள்கிறார்.

இவர்களில் லிங்கராஜுதான் சர்ச்சைக்குரிய ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.  இது வேதிப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம். இந்த நிறுவனம்தான் தற்போது நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயுவை எடுத்து விற்பனை செய்யும் உரிமத்தைப் பெற்றிருக்கிறது.

ஆக ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்தை நடத்தும் அதிபர்கள் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பின்னணி உடையவர்கள் என்பதை தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

இங்கே பாஜக தலைவர்கள் பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அதிதீவிர ஆதரவு குரல் எழுப்புவதின் பின்னணி இதுதான்.

இந்தியாவுக்காக அல்ல.. இந்த ஜி.எம் குழுமத்துக்காகத்தான், தமிழகத்தை தியாகம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.