டிஆர்எஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் திடீர் விலகல்: சந்திரசேகரராவ் அதிர்ச்சி

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியில் இருந்து மூத்த தலைவர் விஸ்வேஷ்வர் ரெட்டி திடீரென விலகி உள்ளார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய விஸ்வேஷ்வர் ரெட்டி

119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ம்தேதி  தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11-ம் நாள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா கட்சியின் மூத்த தலைவர் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது சந்திரசேகராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விஸ்வேஷ்வர் ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில்,  “ஆழ்ந்த யோசனைக்கு பின்னரே நான் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தேன். பிராந்திய வளர்ச்சிக்காக கட்சி தலைமையிடம் பலமுறை விவாதித்தேன், பயனில்லை. எனவே கனத்த இதயத்துடன் கட்சியை விட்டு விலகுவதென்று முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா கட்சியில் இருந்து விலகிய விஸ்வேஷ்வர் ரெட்டி,  செவ்வேலா தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். கட்சி தலைமையிடம் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தனது ராஜினாமா குறித்து விஸ்வேஷ்வரராவ் 3 பக்க அளவிலான கடிதத்தை தலைமைக்கு எழுதி இருப்பதாகவும், அதில்,  கட்சியின் உண்மை தொண்டர்களுக்கு தலைமை அநீதி இழைத்ததாக தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.