‘நான் சிவபக்தன்’: பாஜக விமர்சனத்துக்கு ராகுல்காந்தி பதில்!

அகமதாபாத்,

குஜராத் சட்டசபை தேர்தலையையொட்டி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, அங்குள்ள பிரபலமான கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். இது பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் ராகுல்காந்தியின் சாமி தரிசனம் நாடகம் என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.  இதற்கு பதில் அளித்த ராகுல், நான் சிவபக்தன் என்று கூறி உள்ளார்.

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது.

22ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தங்களது ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு கடந்த மாதமே தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, குஜராத்தில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனமும், அங்குள்ள சாமியார்களிடம் ஆசியும் பெற்று வருகிறார்.

சமீபத்தில் தான் சிவபக்தன் என்று கூறிய ராகுல்காந்தி,  கடந்த 1 மாதத்தில் மட்டும் 11 பிரபலமான இந்துக் கோவில்களுக்கு சென்று தரிசம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது,  ஒவ்வொரு பகுதியிலும், அந்த பகுதி இனத்தவரால் வழிபாடு செய்யப்படும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதி மக்களின் ஆதரவையும் பெற்று வருகிறார்.

ராகுல்காந்தியின் இந்தஅணுகுமுறை குஜராத் மாநில வாக்காளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

நெற்றியில் திலகமிட்டபடி பிரசாரம் செல்வதை குஜராத் மக்கள் வரவேற்கிறார்கள்.

இது பாஜகவுக்கு கடும் எரிச்சலை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில பாஜகவினர், ராகுல் நாடக மாடுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுத்த ராகுல்,  “நான் சிவ பக்தன், சிவனை நம்புகிறேன். உண்மையை நம்புகிறேன். பா.ஜ.க.வினர் என்னை பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு உண்மையில் நம்பிக்கை உள்ளது” என்று கூறி உள்ளார்.