டில்லி

தாம் சைவம் என்பதால் வெங்காயத்தைச் சாப்பிட்டதில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் தற்போது வெங்காயத்தின் விலை விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.   சமீபத்தில் பெய்த கனமழையால் நாடெங்கும் பல இடங்களில் வெங்காயப் பயிர்கள் அழிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்த தட்டுப்பாட்டைப் போக்க அரசு துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய உள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் வெங்காய விலை குறித்து கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  வெங்காய விலை உயர்ந்தது குறித்துப் பேசப்பட்டது.  அப்போது ஒரு உறுப்பினர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் என்ன விலைக்கு வெங்காயம் வாங்குகிறீர்கள் எனக் கேட்டுள்ளார்   அதற்கு அவர் நாங்கள் வெங்காயம் மற்றும்  பூண்டு சேர்த்துக் கொள்வதில்லை எனப் பதில் அளித்தது சர்ச்சையை உண்டாக்கியது.

அடுத்த சர்ச்சையை மற்றொரு மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தொடங்கி வைத்துள்ளார்.    அவர் வெங்காய விலை குறித்து “நான் சைவ உணவு உண்பவன்.  அதனால் வெங்காயம் சாப்பிட்டது கிடையாது.   என்னைப் போல் சைவ உணவு உட்கொள்ளுவோருக்கு வெங்காய விலை எவ்வாறு தெரியும்?” எனக் கூறி உள்ளார்.

 

அமைச்சரின் இந்த பேச்சினால் பலரும் கொதிப்படைந்துள்ளனர்.    அவரது பேச்சு வெங்காயம் ஒரு அசைவ உணவு என்பதைப் போல் உள்ளதாகப் பலரும் சமூக வலைத் தளங்களில் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   ஒரு சிலர் எப்போதிலிருந்து வெங்காயம் அசைவம் ஆனது எனக் கேட்டு கேலி செய்துள்ளனர்.