‘’நானும் பிரதமர் வேட்பாளர் தான்’’ -மாயாவதி அதிரடி

மாயாவதி- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்.

கடந்த மக்களவை தேர்தலில் இவரது கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

இந்த முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் உடன்பாடு வைத்துக்கொண்டு களம் இறங்குகிறது-பகுஜன் சமாஜ்.

மாயாவதி- உத்தரபிரதேச மாநிலத்தில் 4 முறை முதல்-அமைச்சராக இருந்தவர். 4 முறை எம்.பியாக இருந்தார். இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.இதனால் கட்சி தொண்டர்கள் விரக்தியில் இருக்க-

அவரோ ‘இடைத்தேர்தல் வரும் ..பார்த்துக்கொள்ளலாம்’’என்று அவர்களை சமாதானப்படுத்தி யுள்ளார்.

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு மாயாவதி அளித்த விளக்கம் இது:

‘’’’சாதி வெறி பிடித்த –அராஜகமான பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே எனது இலக்கு.நான் வெல்வதை விட –மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் நமது கூட்டணி வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை.ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய  வேண்டும்.அதனால் இந்த முறை போட்டியிடவில்லை’’என்று தெரிவித்துள்ள மாயாவதி-பிரதமர் கனவு தனக்கு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

‘’ நான் 1995 ல் உ.பி.முதல்-அமைச்சராக முதன் முறையாக பதவி ஏற்றேன். அப்போது நான் எம்.எல்.ஏ.வாகவும் இல்லை.எம்.எல்.சி.யாகவும் இல்லை.

அதே சூழ்நிலை தான் இப்போதும்.எம்.பி.யாக இல்லாத ஒருவர் அமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ தேர்வு செய்யப்பட்டால் –அவர் 6 மாதங்களில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

நான் உயர் பதவிக்கு (பிரதமர்) தேர்ந்தெடுக்கப்பட்டால் உ.பி.யில் காலியாக இருக்கும் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்’’ என்று கட்சிக்காரர்களை ஆறுதல் படுத்தியுள்ளார்.

‘இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியது மட்டுமே எனது வேலை.வெற்றியை கொடுக்க வேண்டியது மக்கள் பொறுப்பு’’ என்று டுவிட்டரில் தனது கருத்தை பதியவிட்டுள்ளார்-மாயாவதி.

–பாப்பாங்குளம் பாரதி