நான் தாடி வைத்துள்ளதால் பிரதமராகும் தகுதி உள்ளது : சரத்குமாரின் நகைச்சுவை

கும்பகோணம்

தாம் தாடி வைத்துள்ளதால் தமக்குப் பிரதமராகும் தகுதி உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் இறங்கி உள்ளன. அவ்வகையில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.  இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் சரத்குமார், மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளனர்.

ராதிகா தனது உரையில் “யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும்.  நமது இலக்கை நாம் அடைந்து விட்டோம்.  பலரும் முதல்வராக விரும்பும் போது சரத்குமார் ஏன் முதல்வர் ஆகக் கூடாது.  அவருக்கு அந்த தகுதி இல்லையா? எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பி உள்ளார். அதன் பிறகு சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது சரத்குமார், ”முதல்வர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?  ஆனால் எனக்குப் பிரதமராகும் தகுதி உள்ளது. நான் தாடி வைத்துள்ளேன்.  நான் ஒரு சீட்டு இரு சீட்டுக்காக கூட்டணி வைக்க விரும்பவில்லை.  நாம் இனி தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து அவர், “சட்டங்கள் மக்களுக்காகத்தான் இருக்க வேண்டும்.  மக்கள் வைக்கும் சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வது தவறில்லை.  விவசாயிகளுக்கு இந்த சட்டங்களில் உள்ள பயன்கள் குறித்து எடுத்துச் சொல்ல முயல வேண்டும்” எனக் கூறி உள்ளார்.