நீண்ட இடைவெளிக்குப் பிறகு “அவதார வேட்டை” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஸ்டார் குஞ்ச்மோன் தயாரிப்பில் உருவாகும்  இந்தப் படத்தில் வி.ஆர்.விநாயக்,  ரியாஸ்கான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதெல்லாம் விசயமல்ல…

“நான் பக்கா பாஜககாரன். விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்” என்று சொல்லிவருகிறாராம் பவர் ஸ்டார் சீனிவாசன்.

டில்லியை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் டில்லி போலீசார் சீனிவாசனைக் கைது செய்தனர்.

பிறகு ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் ஆகியோர் புகார் அளித்தனர். “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை வாங்கி ஏமாற்றிவிட்டார்” என்று அவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து பெங்களூரு போலீசார், பவரை கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வந்தார்.

இதற்கிடையே பாஜகவில் சேர்ந்தார், பவர் ஸ்டார்.

இடையில் நீண்ட நாட்கள் ஆளைக்காணவில்லை. தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்கத் துவங்கியிருக்கும் பவர், “பிரதமர் மோடியை சந்திக்கப்போகிறேன்” என்று கெத்தாக சொல்லிக்கொண்டு வலம் வருகிறாராம்.

பாஜக தரப்பில் விசாரித்தால், “அவராக வந்து கட்சியில் சேர்ந்தார்.  பிறகு  இருந்து விலகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.  அவரைப்போன்ற மோசடிப் பேர்வழிகளுக்கு கட்சியில் இடமில்லை” என்கிறார்கள்.