டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பந்தயத்தில் நான் இருக்கிறேன்: சாய்னா நேவால்

கொல்கத்தா: அடுத்தாண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான போட்டியில் தான் இருப்பதாகவும், அதற்குமுன், சிறப்பான வகையில் தயாராக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.

அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொருவரின் எண்ணத்திலும் ஒலிம்பிக் இருப்பது எனக்குத் தெரியும். அது மிகப்பெரிய ஒன்று. அதேசமயத்தில், வேறுபல போட்டிகள் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நான் என்னை சிறப்பாக தயார்படுத்திக்கொண்டு, உலகத் தரவரிச‍ையில் முதல் 20 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் வீழ்த்தியாக வேண்டியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, 2 அல்லது 3 மாதகால பயிற்சிகள் உள்ளது. அதற்கு முன்னதாக, குறைந்தது 7 அல்லது 8 தொடர்கள் வரை நீங்கள் விளையாடி, உங்களை நிரூபித்திருக்க வேண்டும். அதன்பிறகுதான், நான் ஒலிம்பிக்கைப் பற்றி சிந்திப்பேன்.

ஆனால், நான் ஒலிம்பிக்கிற்கான போட்டியில் இருக்கிறேனா என்றால், ஆம்! என்றே சொல்வேன். அதற்காக நான் கடுமையாக முயற்சித்து வருகிறேன்” என்றார் சாய்னா.