பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என 2016ம்ஆண்டு அறிவித்த தமிழருவி மணியனின்,சமீப காலமாக  ரஜினி குறித்த அறிவிப்புகள் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அவர்மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதியிலும் போட்டியிட போகிறோம். போருக்கு தயாராகுங்கள் என கூறினார். அதனால்அவர் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளை கடந்தும், ரஜினி இதுவரை அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை.

இந்த நிலையில், திராவிடக்கட்சிகளான திமுக, அதிமுகவை ஒழிப்பேன், இதுவே எனது கனவு என்று அவர் ஆவேசமாக கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல எழுத்தாளரும், வார்த்தைத் தடுமாற்றம் இன்றி சரளமாக பேசும் ஒருசில அரசியல் தலைவர்களிலும் முக்கியமானவருமான தமிழருவி மணியன்,  காந்தி மற்றும் காமராஜர் மீது கொன்ற பற்று காரணமாகவே, காந்திய மக்கள் கட்சி என்று தொடங்கிய மணிய னுக்கு தமிழருவி என்ற பெயரை வழங்கிய மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார்.

காமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு எனப்பட்ட நிறுவன காங்கிரசு ஆகியவற்றில் இணைந்து தொண்டாற்றினார்.

அவரது மறைவுக்கு பிறகு, ராமகிருட்டிண கேக்டே (Ramakrishna Hegde) ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி என்னும் கட்சியைத் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

பின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று லோக்சக்தி கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

2008 ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சனையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்டு அங்கிருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் 2014ம் ஆண்டு பிப்ரவரி 10ந்தேதி அன்று  காந்திய மக்கள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி மக்களுக்கு சேவையாற்றப்போவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு  மே மாதம் 26ந்தேதி அரசியலை விட்டுப் போகிறேன் என்று தடாலடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சற்று காலம் அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பின்னர் ரஜினியுடன் ஏற்பட்ட நட்பைத் தொடர்ந்து, ரஜினியின் பிரசார பீரங்கி போல செயல்பட்டு வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என கடந்த 3 வருடங்களாக கூறி வருபவர், தற்போது, ரஜினியைக் கொண்டு, தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை அடியோடு வேரறுப்பேன் என்று ஆவேசமாக கூறி உள்ளார்….

இவ்வளவு ஆவேசமாக கூறும் தமிழருவி மணியன் கடந்த 2 ஆண்டுகளில் தெரிவித்த சில கருத்துக்களை வாசகர்களுக்காக தொகுதி வழங்கி உள்ளோம்..

அத்துடன் அவர் பத்திரிகை.காம் இணைய இதழுக்கு கடந்த 2016ம் ஆண்டு அளித்த பிரத்யேக பேட்டியின் இணைப்பும் வாசகர்களுக்காக கொடுத்துள்ளோம்… வாசகர்கள்  தங்களது மேலான அபிப்பிராயங்களை (comment) எங்களுக்கு பதிவிடுங்கள்…

தமிழருவி மணியன் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கள் சில….

2016ம் ஆண்டு மே 26ந்தேதி

தேர்தலுக்கு பிறகு, பொதுவாழ்வை விட்டு விலகுவதாக , காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிவித்தார்.  காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமல் போனால்  பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த படி இந்த முடிவை  எடுத்திருப்பதாக கூறினார்.

2017ம் ஆண்டு ஜூன் 1ந்தேதி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ தலையெடுத்துவிடக்கூடாது.  தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்ப வேண்டும். ரஜினிக்கு 20 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. அவர் சரியாக செயல்பட்டால் இந்த வாக்கு சதவிகிதம் 30 ஆக உயரும் என்று  தமிழருவி மணியன் தெரிவித்தார்..

2017ம் ஆண்டு ஆகஸ்டு 8ந்தேதி

ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய தமிழருவி மணியன், இன்னும் 2 வாரங்களில் ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார். தென்னக  நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.

2017ம் ஆண்டு ஆகஸ்டு 20ந்தேதி

ரஜினியை முன்னிலைப் படுத்தி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது,  ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? அப்போது, ரசிகர்களிடம் ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும்,  என் பெயரைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைத்தால் விலகி விடுங்கள் என்று ரஜினி கூறியுள்ளார்… அவர் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தர தயாராகிவிட்டார், நிச்சயம் நல்லது நடக்கும். தமிழக முதல்வராக ரஜினி அமர்வார்” என்று பேசினார்.

2017ம் ஆண்டு அக்டோபர் 9ந்தேதி, 

ரஜினியின் அரசியல் வருகை உறுதிசெய்யப்பட்ட பின்பே கமல் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். ‘நான் முதலமைச்சர் பதவி என்ற முள்கிரீடத்தைச் சுமப்பதற்குத் தயார்’ என்று தன்னுடைய அந்தரங்க ஆசையையும் தயக்கமின்றி கமல் வெளிப்படுத்திவிட்டார். ரஜினி மீது காவிச்சாயம் பூச  உள்நோக்கத்துடன் கமல்ஹாசன் முயல்வதாக  குற்றம் சாட்டியிருந்தார்.

2017ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி டிடிவி தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி என்றும், தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்றும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்கும் தருணம் வந்துவிட்டது என்றும்  காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு அக்டோபர் 26ந்தேதி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, திமுக அதிகாரப்பூர்வ நாளிதழ், முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அதற்குபதில் அளித்து பேசிய தமிழருவி மணியன்,  தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவதை தடுக்கும் ஒரே சக்தி ரஜினிகாந்தான் என்றும், அதனால் தான் அவர் மீது அவதூறுகள் வீசப்படுகின்றன என்று கூறினார்.

2019ம் ஆண்டு மே 18ந்தேதி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடியும் போது ரஜினி அரசியலுக்கு வருவார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து வரவேண்டுமெனில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு நவம்பர் 10ந்தேதி

தனது ஒரே கனவு, இலக்கு இதுதான் என்று கூறியவர்,  அதை நிறைவேற்ற நான் எது வேண்டுமானாலும் செய்வேன், தமிழகத்தை அழித்து, குட்டிச்சுவராக்கிய திமுக, அதிமுக இரண்டுமே அழிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக கூறியவர், அதிமுக, திமுகஇந்த இரு திராவிடக் கட்சிகளையும் கடந்த 50 வருடமாக பார்த்து வருகிறேன். இவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன் என்றார்.

தமிழருவி மணியன் பத்திரிகை.காம் இணைய இதழுக்கு கடந்த 2016ம் ஆண்டு அளித்த பிரத்யேக பேட்டியைக் காண கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யுங்கள்…

https://www.patrikai.com/there-is-a-difference-between-me-and-nallakannu-tamilaruvi-interview/

https://www.patrikai.com/political-leaders-have-to-retire-at-the-age-of-75-tamilaruvi-maniyan-interview-part-2/

https://www.patrikai.com/thankless-community-tamilaruvi-maniyan-interview-closing-part/

 

தமிழருவி மணியனின் ஆசை நிறைவேறுமா? அல்லது காணல் நீராகுமா என்பது ரஜினி அரசியல் கட்சி அறிவித்து, தேர்தலை சந்தித்து, அதன் முடிவுக்குப் பிறகுதான் தெரிய வரும்…. அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்….