நான் லெபனான் நாட்டில் இருக்கிறேன் : நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் அறிவிப்பு

பெய்ரூட்

ப்பானில் வீட்டுக்காவலில் இருந்து தப்பி ஓடிய நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசன் தாம் லெபனானில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிசான் மோட்டார் மற்றும் ரெனால்ட் கார் நிறுவனங்களின் தலைவராக கார்லோஸ் கோசன் பதவி வகித்து வந்தார்.  அவர் தமது நிறுவன பங்குதாரர்களிடம் தவறான தகவல் அளித்து பல்லாயிரம் கோடிக் கணக்கில் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஜப்பான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி வீட்டுக் காவலில் வைத்தது.

இவருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்  எனப் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் திடீரென தப்பிச் சென்றார்.  அவர் துருக்கி வழியாக லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டுக்கு தப்பிச் சென்று வசிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.  அவருக்கு லெபனான் நாட்டில் குடியுரிமை உள்ளது.

நேற்று கோசன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “நான் தற்போது லெபனானில் வசித்து வருகிறேன். நான் ஜப்பான் நாட்டின் கடுமையான சட்டத்தின் கீழ் இருக்க விரும்பவில்லை.  அங்கு அடிப்படை மனித உரிமைகள் கூட எனக்கு அளிக்கப்படவில்லை.  நான் நீதிக்குப் பயந்து ஓடிவரவில்லை.

மாறாக அநீதி மற்றும் அரசியல் காழ்ப்புணர்வில் இருந்து தப்பி வந்துள்ளேன்.   என்னால் இங்குச் சுதந்திரமாக ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.  நான் அனேகமாக அடுத்த வாரம் உங்களை நேரில் சந்திக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.