Random image

நான் அற்ப மனிதன் அல்ல! வைகோவுக்கு திருமாவளவன் பதில்

“பிறரை தூண்டிவிட்டு ஒருவரை விமர்சிக்கும் அளவுக்கு நான் அற்ப மனிதன் அல்ல” என்று வைகோவுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது, “திராவிட கட்சிகள் ஆட்சியில்  தலித்துகளுக்கு உரிய  முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஒரு விமர்சனத்தை சிலர் முன்வைக்கிறார்களே” என்று கேட்கப்பட்டது.

இதையடுத்து திராவிட ஆட்சியில் தலித் மக்கள் பெற்ற உரிமைகள் குறித்து வைகோ ஆவேசமாக பட்டியலிட்டார். மேலும், இக்கேள்வி தன்னைக் குறிப்ப்பிட்டு தனிப்பட்ட முறையில் கேட்பதாக நினைத்துக்கொண்டு, “என் வீட்டில் தலித் மக்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் சரிசமமாகத்தான் பழகுகிறேன்” என்றார். பிறகும் மனம் ஆறாத வைகோ, மைக்கை கழற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு, “வைகோ ஒரு மேலாதிக்க ஆணவம் மேலோங்கிய தலித் விரோதி போல் தோன்றுகிறார்” என்று தனது முகநூல் பக்கத்தில் பிவிட்டார். பிறகு அதை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ இது குறித்து பேசினார்.

அப்போது அவர், “நான் ஆபத்தானவன் என்பதை வன்னியரசு கூட்டம் புரிந்துகொள்ள வேண்டும். தூரத்தில் இருந்தால் இந்த நெருப்பு குளிரைப் போக்கும்.  உரசிப்பார்த்தால் இந்த நெருப்பு தீப்பிடிக்கும்.

(வன்னியரசு எழுதியதைப் படித்தவுடன்) இரவெல்லாம்  எனக்குத் தூக்கம் இல்லை.

மனம் மிகவும் நொந்துவிட்டது. அதனால்தான் இதையெல்லாம் பேசுகிறேன்.

2006ம் ஆண்டு,  ஜெயலலிதா  தலைமையிலான கூட்டணியில விடுதலை சிறுத்தைகளும் இடம் பெற்றிருந்தது.  அப்போது திருமாவளவன் தேர்தல் செலவுக்கு தன்னிடம் பணம் இல்லை முதல் முறை முப்பது லட்ச ரூபாயும் அடுத்த முறை இருபது லட்ச ரூபாயும் கொடுத்தேன். இதையெல்லாம் யாரிடமும் சொன்னது கிடையாது.

மனசு நொந்து எரிந்துகொண்டிருப்பதால் இதைச் சொல்கிறேன்” என்று வைகோ பேசினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாவது:

“குறிப்பிட்ட முகநூல் பதிவை நீக்கும்படி வன்னியரசிடம் கேட்டுக்கொண்டேன். உடனடியாக அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து நீக்கவிட்டார்.

ஆனால் சாத்தூரில் வைகோ கூறியிருக்கும் கருத்து இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக தெரியவில்லை.

2006 சட்டப்பேரவை தேர்தலின் பொழுது  வைகோ உதவி செய்தார். இதற்காக  பலமுறை அவருக்கு நேரில் நன்றி தெரிவித்திருக்கிறேன்.

இதில் ஒளிவு மறைவு ஏதுமில்லை.

ஆனால் வன்னியரசு எழுதிய பதிவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. அது குறித்து எந்த அடிப்படையில் வைகோ பேசியிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தப் பேச்சு, வன்னியரசு பதிவு செய்த கருத்துக்கு விடையா அல்லது என் மீது உள்ள கோபமா என்று எனக்குத் தெரியவில்லை.

நான் சொல்லித்தான் வன்னியரசு அந்த பதிவைப் பதிந்தார் என்ற கருத்து தவறானது. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் நான் அல்ல.  என்னை கடுமையாக விமர்சிப்பவர்களை கூட நான் விமர்சிப்பதில்லை. ஒருவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் நேருக்கு நேர் சொல்வேன். அந்த துணிச்சல் எனக்கு இருக்கிறது. மற்றவரை தூண்டிவிட்டு இப்படி எழுதுங்கள், அப்படி எழுதுங்கள் என சொல்லக்கூடிய அற்ப பிறவி நான் அல்ல!” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

#sillyman #Thirumavalavan #Vaiko #vanniarsu #facebook