பெட்ரோல் டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை : மத்திய அமைச்சர்
ஜெய்ப்பூர்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் தமக்குஎவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் அத்வாலே தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தினம் தினம் வரலாறு காணாத உச்சத்தை தொடும் விலையை கட்டுப் படுத்த மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என சொல்லி வருகிறது. இதனால் மக்கள் கடும் துயருற்று வருகின்றனர்.
நேற்று ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அமைச்சர், “தற்போது பெட்ரோல் மற்றும்டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அதனால் எனக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. நான் ஒரு மத்திய அரசு அமைச்சர் என்பதே இதற்கு காரணம்.
எங்களுக்கு பல அரசு சலுகைகள் உள்ளன. அந்த சலுகைகளை நான் பயன்படுத்தி வருகிரேன். ஆகவே எனக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பற்றி எவ்வித கவலையும் கிடையாது. ஒருவேளை எனது அமைச்சர் பதவி பறி போனால் மட்டுமே நான் இது குறித்து பாதிப்பு அடைவேன்” என கூறி உள்ளார்.
பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அவதியுறும் போது அமைச்சர் இவ்வாறு பேசியது மக்களிடையே கடும் அதிருப்தியையும் சர்ச்சையையும் உண்டாக்கி இருக்கிறது.