நாமக்கல்: அனைவரும் என்னை முதலமைச்சர் என்கிறார்கள், ஆனால், நான் உங்களைதான் முதலமைச்சராகப் பார்க்கிறேன், நான் முதல்மைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் அல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.  திமுக, அதிமுக இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.

அதிமுக சார்பில்,  வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில்  நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக காலை முதல் இரவு வரை 6 நாள் சூறாவளி பிரசாரம் 4 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

முதலில் கடந்த 19–ந் தேதி அன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். நடந்து சென்றும், பொதுக்கூட்டத்திலும் அவர் பேசி மக்களிடம் வாக்கு கேட்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் (27–ந் தேதி) சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கினார்கள்.

இதையடுத்து, இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னதாக, நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து பிரச்சாரத்தை துவக்கினார். பாப்பி நாயக்கன்பட்டி பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது,  ஏழை மக்களுக்காவே 2000 மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அனைவரும் என்னை முதலமைச்சர் என்கிறார்கள். ஆனால், நான் உங்களைதான் முதலமைச்சராகப் பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரை மக்கள் தான் முதலமைச்சர். இது நீங்கள் கொடுத்த பதவி.முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல. உழைப்பால் உயர்வடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன்.

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. சென்னை அப்போலோவில் கிடைக்கும் அதே சிகிச்சை, நாமக்கல் மக்களுக்கும் கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல்  பிரச்சாரம் மேற்கொண்டு பல்வேறு தரப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டார். வீடு வீடாக சென்று ஆதரவு கேட்டார். வணிகர்களை சந்தித்தார். முதலைப்பட்டி, முள்ளம்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பொது கூட்டங்களில் பேசினார். காலை முதல் இரவு வரை தொடர்ந்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

நாளை (30–ந் தேதி)யும் சேந்தமங்கலம், அலங்காநத்தம், வளையப்பட்டி ஆகிய இடங்களில் மக்களை சந்திக்கிறார்.

திருச்சி

இதனை அடுத்து திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறார். தொட்டியத்தில் வாழைத் தோட்டங்களை பார்வையிட்டு வாழைத் தோட்ட விவசாயிகள், தொழிலாளர்களை சந்திக்கிறார். கண்ணனூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, திருச்சி ஆகிய இடங்களில் விவசாயிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், உள்ளூர் பிரமுகர்களை சந்திக்கிறார்.

31–ந் தேதி அன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காலையில் சந்தை மக்களுடனும், வியாபாரிகளுடனும் கலந்துரையாடுகிறார். திருச்சி சோமரசம்பேட்டையில் மகளிர் சுயஉதவி குழுவினரை சந்திக்கிறார். தொடர்ந்து திருச்சியில் பல்வேறு தரப்பினரையும் மக்களையும் சந்தித்து ஆதரவு கேட்கிறார்.

ராமநாதபுரம்

2–ந் தேதி அன்று (சனி) ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வேளாண் பெருமக்கள், நெசவாளர்கள், மீனவர்கள், முஸ்லீம் ஜமாத் பிரமுகர்கள், மரக்கரி தயாரிப்பாளர்களை சந்திக்கிறார்.

இரவு முதுகுளத்தூர் தொகுதி சாயல்குடியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தூத்துக்குடியில் 2 நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மற்றும் 4–ந் தேதிகளில் தீவிர பிரச்சாரம் செய்கிறார். 3–ந் தேதி கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி மரியாதை செலுத்துகிறார். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இந்த மாவட்டத்திலும் விவசாயிகள், சிறு வணிகர்கள், பருத்தி விவசாயிகள், சிறு வணிகர்கள், விவசாய தொழிலாளர்களை சந்திக்கிறார்.

கோவில்பட்டியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

4–ந் தேதி அன்று ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் விவசாயிகள், கருப்பட்டி, வெல்ல உற்பத்தியாளர்கள், மீனவர்களை சந்திக்கிறார்.

4 நாட்களும் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி தொடர்ந்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்கிறார்.