சென்னை:

நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்…  வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.

அரசு மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் இல்லை என்பது வடிகட்டி பொய் என்றும் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா தடுப்பு பற்றி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உள்பட சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை  நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியளார்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துடன் எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதனால் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் கொரோனா  வைரசை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று சற்று அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் நோய் தடுப்பு பணிகள் பற்றி அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். மக்கள் நெருக்கமான பகுதி, எனவே நோய் தொற்று சற்று அதிகமாக உள்ளது. அரசை பொறுத்தவரை தொற்றை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும்  நாள் ஒன்றுக்கு சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டும் 4 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அதைத்தொடர்ந்து, தொற்று உறுதியானவர்ளுடன்  யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்று கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். தொற்று ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 13 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டிருக்கிறார்கள். இது 56 சதவிகிதமாகும். சரியான முறையில் செயல்பட்டு மருத்துவர்கள், சிகிச்சை அளித்ததால் தான் 56 சதவிகிதம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் தமிழகத்தில் தான்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 130 பேர் ஆகும். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 184 ஆகும்.  அதேபோன்று இறப்பு விகிதமும் இங்கு தான் குறைவு. 0.8% இறப்பு விகிதம் ஆகும்.

எனவே யாரும் கொரோனா குறித்து அச்சப்பட தேவை இல்லை. உரிய முறையில் சிகிச்சை அளிப்பதால் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். எனவே மக்கள் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி முழுமையாக கிடைக்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகிறது.

சென்னையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ, டாக்சிகள் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், நகை, ஜவுளி கடைகள் அரசு சொன்ன வழிமுறைகளை பின்பற்றி திறக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

8–ந் தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் குற்றச்சாட்டு – எடப்பாடி பதில்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகஅரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும்,  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று சில குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

நான் கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது 9 லட்சத்து 14 ஆயிரம் பி.சி.ஆர். கிட்கள் வரப்பெற்றதாகவும் அதில் 4.64 லட்சம் தான் பயன்படுத்தப்பட்டது என்றும் மீதி 1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாகவும் நான் பேசியதாக ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.

மீதி 2 லட்சத்து 71 ஆயிரம் உபகரணங்கள் எங்கே என்று கேட்டிருக்கிறார். அவர் ஒன்றை தவற விட்டு விட்டார். 2 லட்சத்து 71 ஆயிரம் உபகரணங்களும் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்டாலின் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்புகிறார். ஊரடங்கை பயன்படுத்தி என்னை முன்னிலைப்படுத்த பார்ப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் தான் விளம்பரம் செய்கிறார். அரசு சரியான முறையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

15 லட்சத்து 45 ஆயிரத்து 700 பி.சி.ஆர். கருவிகளுக்கு அரசு ஆணை பிறப்பித்து 11 லட்சத்து 51 ஆயிரத்து 700 கருவிகள் வந்துள்ளது. நன்கொடையாக வந்தது 53 ஆயிரத்து 516 ஆகும். மத்திய அரசு தந்தது 50 ஆயிரம். இதுவரை மொத்தம் 12 லட்சத்து 55 ஆயிரத்து 216 கருவிகள் பெற்றுள்ளோம்.

4 லட்சத்து 59 ஆயிரத்து 800 கருவிகள் இருப்பில் உள்ளது. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது 7 லட்சத்து 91 ஆயிரத்து 46 ஆகும். இது தான் உண்மை. மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. முறையாக செயல்பட்டு வருகிறோம்.

கொரோனா தொற்று கண்ணுக்கு தெரியாதது. எளிதில் இது பரவும். எனவே அதிக அளவில் பரிசோதனைகள் செய்கிறோம். அதிக பரிசோதனை செய்ததால் தான் நோய் பரவலை கண்டுபிடிக்க முடிகிறது. அப்படி கண்டுபிடித்ததால் தான் நோயை தடுக்க முடியும்.

பிற மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களிடம் பரிசோதனை செய்ததில் 1600 பேருக்கு தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாநிலத்தில் பரிசோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை. நான் இதனை குறையாக சொல்லவில்லை. நாம் அதிக அளவில் பரிசோதனை செய்கிறோம்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், உள்ளாட்சி, வருவாய் துறை என அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஒருவருடன் 10 நிமிடம் தொடர்ந்து பேசினால் தொற்று வரும் என்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதால் தான் தொற்று கட்டுக்குள் உள்ளது.

அரசிடம் 2741 வெண்டிலேட்டர்கள் உள்ளன. 620 வெண்டிலேட்டர்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 630 வெண்டிலேட்டர்கள் உள்ளன. 5 பேருக்கு தான் வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி வெண்டிலேட்டர்கள் இருக்கிறது. வெண்டிலேட்டர் இல்லை என்று ஸ்டாலின் கூறியிருப்பது வடிகட்டிய பொய் ஆகும். யாரும் அச்சப்பட தேவை இல்லை.

அரசு எல்லா வகையிலும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

விலையில்லா முககவசம்

எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும். சென்னையில் 87 லட்சம் பேர் இருக்கிறார்கள். தொழிற்சாலைகளில் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் அதிகம். எனவே அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சென்னையில் மக்கள் காய்கறி, மீன் மார்க்கெட், கறி கடைகள், வங்கி, ரேஷன் கடைகள் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். வீட்டை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். நன்றாக கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனை செய்தால் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.

இவ்வாறு கூறினார்.