Random image

நான் அவன் அல்ல!: எச்.ராஜா மீண்டும் மறுப்பு

“காவல், நீதித்துறைகளை அவமதித்தப்பேசும் தொணியில் வெளிவந்துள்ள வீடியோவில் உள்ளது எனது குரல் அல்ல” என்று எச்.ராஜா மறுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை குறிப்பிட்ட வழியில் செல்ல இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் முயன்றனர். இதற்கு உயர்நீதிமன்ற உத்தரவை எடுத்துக்காட்டி காவல்துறையினர் மறுத்தனர்.

ஊர்வலத்துக்கு தலைமை வகித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அப்போது காவல் மற்றும் நீதித்துறையை கடுமையாக சாடியதாக வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், எச்.ராஜா, “போலீசுக்கு வெட்கமாக இல்லையா, உங்க டிஜிபி வீட்டுல ரெய்டு நடந்த அப்பவே நீங்க எல்லாம் யூனிபார்மை கழட்டிட்டு வீட்டுக்கு போய் இருக்கனும். போலீஸ் முழுக்க லஞ்சம்தான். நூறு சதவிகிதம் ஈரல் கெட்டிருக்கு. இஸ்லாமிய, கிறிஸ்தவர்களிடம் லஞ்சம் வாங்கிட்டு செயல்படுறீங்க. வேண்டுமானால் நான் லஞ்சம் தருகிறேன்.

இன்னைக்கு புழல் சிறையில தீவிரவாதிகள் கலர் டீவி வச்சு இருக்காங்க. உங்களுக்கு எல்லாம் எல்லாம் வெட்கமா இல்லையா” என்றும், “ஹைகோர்ட் என்ன மயிரு, மண்ணாங்கட்டி” என்றும் எச். ராஜா பேசுவதாக அந்த வீடியோவில் உள்ளது.

இதையடுத்து, “இதற்கு முன்பும் சில அரசியல்வாதிகள் காவல்துறையினருக்கு எதிராக வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். . ஆனால் இந்த அளவிற்கு யாரும் கொச்சைப்படுத்தியதில்லை. இதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றும், “காவல்துறை மற்றும் நீதித்துறையை இவ்வளவு கேவலப்படுத்திய எச்.ராஜா மீது அத்துறைகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன” என்றும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் எச்.ராஜா,  “குறிப்பிட்ட வீடியோவில் உள்ளது எனது குரல் அல்ல. அந்த யாரோ வீடியோவை எடிட் செய்து பதிவிட்டுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் எச்.ராஜா சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசியதாக பிரச்சினை எழுந்தபோதெல்லாம் அவர் தான் அப்படிப் பேசவில்லை என்றும், அவரது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டபோது தனது அட்மின் பதிவிட்டுவிட்டார் என்றும் கூறிவந்தார். இப்போது வீடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என்று தெரிவித்துள்ளார்.