நான் பதவி விலகப்போவதில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்

டில்லி:

த்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில்,ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் பட்டேல்  ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அது தவறு என்றும், தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும்  உர்ஜித் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர்  நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இது சர்வதேச சந்தையில் இந்தியாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,   ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  ஆச்சார்யா,  மத்திய அரசு பாராளுமன்ற் தேர்தலை மனதில் கொண்டு  ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பிலிருந்து உர்ஜித் பட்டேல் நீக்கப்படலாம் என்றும், அவர் ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உர்ஜித் பட்டேல், இந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, வருகிற 19ம் தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அப்போது பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம்,  ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் அவசிய மானது என்றும், அதனை மதிப்பதாகவும்  தெரிவித்துள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பரஸ்பரம் பல்வேறு விவகாரங்களை அவ்வப்போது ஆலோசித்து முடிவு எடுத்து வரும் நிலையில், ஒருபோதும் பொதுவெளியில் அந்த விவகாரங்களை விவாதித்ததில்லை என நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், மோடி அரசின் தன்னிச்சையான பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கை காரணமாக பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.