ஸ்டெர்லைட்டை ஆதரிக்கவில்லை!: “ஈசா” ஜகி வாசுதேவ் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையை தான், ஆதரிக்கவில்லை என்று   “ஈசா” யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி, அதை மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தினர். சமீபத்திய போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன் நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர்.

அதன் பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.  தற்போது ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழும அதிபர் அனில் அகர்வால்,  யோகா குரு பாபா ராம்தேவை சந்தித்தார். அதன் பிறகு பாபா ராம்தேவ், “ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் பலர் வேலை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும்” என்று ஆதரவு தெரிவித்தார். அதே நேரம், சுற்றுச் சூழல் மாசு அடைவதால் அந்த ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்காதது சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில் கோவை ஈசா யோகா மைய அதிபர் ஜகி வாசுதேவ், தனது ட்விட்டர் பதிவில், “தாமிரம் உருக்குவதைப் பற்றியோ அந்த தொழிற்சாலை தொழில் நுட்பம் பற்றியோ எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவுக்கு தாமிரம் அவசியத் தேவை. அதை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியவில்லை எனில் சீனாவில் இருந்து வாங்க நேரிடும். சுற்றுச் சூழல் மாசு ஆவதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரம் ஸ்டெர்லைட் போன்ற ஒரு மிகப் பெரிய வர்த்தக நிறுவனத்தை மூடுவது பொருளாதார தற்கொலைக்கு சமம்.” என பதிவிட்டார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ஜகி வாசுதேவ் ஆதரவு அளிப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தனது நிலைப்பாடு குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ”நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ அல்லது எந்த ஒரு தொழிற்சாலை அல்லது அரசியல் கட்சிக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை. சுற்றுச் சூழல் மாசாவதை தடுக்க சட்டப்படி போராடலாம். ஒரு வர்த்தகத்தை மூடுவதோ அல்லது பொதுச் சொத்துக்களை எரிப்பதோ தேசிய நலனுக்கு நல்லதல்ல. இதை அரசியலாக்க வேண்டாம். ஏற்கனவே பல உயிர்களை இழந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.