திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் பதவிக்கு நான் மிகச்சிறந்த தேர்வு இல்லைதான்; அதேசமயம் மோசமான தேர்வும் கிடையாது என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தற்போது 41 வயதாகும் உதயநிதி ஸ்டாலின் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்தபோது, எனக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு தரப்பட வேண்டுமென்று மாவட்டச் செயலாளர்கள் தலைமையை வற்புறுத்தினார்கள். எனது பிரச்சாரத்திற்கு இளைஞர்களிடையே நல்ல ஆதரவு இருப்பதாக அவர்கள் தலைமையிடம் விளக்கினார்கள்.

சீமான் மற்றும் கமலஹாசன் போன்றோர் அரசியல் களத்தில் இருப்பதால், கட்சியின் பொறுப்பில் ஒரு இளைஞரை நியமிக்க வேண்டிய தேவையும் எழுந்தது. தொடக்கத்தில் இந்தப் பொறுப்பை ஏற்கும்படி தலைமை என்னிடம் சொன்னபோது, கட்சிக்கு இன்னம் அதிகம் செய்ய வேண்டியிருப்பதால் அதை மறுத்தேன். ஆனால், ஏற்க வேண்டிய காலச்சூழலால் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

நான்தான் திமுகவின் எதிர்காலம் என்பதை நிச்சயம் ஏற்கமாட்டேன். முதலில் இந்தப் பொறுப்பில் என்னை நான் நிரூபிக்க வேண்டியுள்ளது. நிறைய எதிர்பார்ப்புகள் என்மீது உள்ளன. நாங்கள் ஒரு புதிய செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இதற்காக ஒரு தனிக்குழுவே பணியாற்றி வருகிறது.

திமுக இளைஞர் அணியில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. வேலூர் தேர்தல்தான் எங்கள் வியூகத்திற்கான முதல் சோதனை. அரசு இயந்திரம் முழு பலத்துடன் அங்கே களமிறங்கியது. ஆனாலும் நாங்கள் கடுமையாக உழைத்தோம். வெற்றி கிடைக்குமென உறுதியாக நம்புகிறோம்.

நான் அரசியலில் நீண்ட நாட்களாகவே ஈடுபட்டு வருகிறேன். என் தந்தைக்காக ஆயிரம் விளக்கு மற்றும் தயாநிதி மாறனுக்காக மத்திய சென்னை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளேன். சினிமாவில் நடித்திருக்கவில்லை என்றால், நான் பிரபலமாகியிருக்க மாட்டேன். சினிமாதான் எனக்கான வெளிச்சத்தை தந்தது. நான் இன்னும் சில படங்களில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.

நான் சிறந்த பேச்சாளன் கிடையாது. எனவே, உரையாடல் பாணியில் பேசுகிறேன். அதற்கு பொதுமக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. கலைஞரை எங்களின் தாத்தா என்பதைவிட தலைவராகத்தான் அதிகம் பார்த்தோம். அவரின் மீது ஒருவித பயம் இருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில்தான், அவரின் பேரனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பதை உணர்ந்தேன்.

அந்த நாட்களில் அவர் தொலைபேசியில் அழைத்தால்கூட, எழுந்து நின்றுதான் பேசுவோம். அவருடன் கோபாலபுரம் இல்லத்தில், கடந்த 1980களில் கிரிக்கெட் ஆடியுள்ளோம். அவர் தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் பலரையும் கவர்ந்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் என்னை நிரூபிக்க வேண்டி, எனது தந்தை நிறைய அளவுகோல்களை நிர்ணயித்துள்ளார். எனவே, எனக்கு இது சவாலான ஒன்று.

எனது தந்தையையும் தாத்தாவையும் ஒப்பிட முடியாது. யாரையும் யாருடனும் ஒப்பிடுவது கடினம். அண்ணாவை பெரியாருடனும், கலைஞரை அண்ணாவுடனும் ஒப்பிடுவீர்களா? ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு தலைவரின் தனித்துவத்தின்பால் நாம் கவரப்படுகிறோம். என் தந்தையின் கடின உழைப்பும், எனது தாத்தாவின் பன்முகத்தன்மையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

கொள்கை இல்லாமல் எந்தவொரு அரசியல் கட்சியும் நிலைக்க முடியாது. திராவிட சித்தாந்தம் நீர்த்துப்போய் விடவில்லை. பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டபோது, தமிழகமெங்கும் எழுந்த எதிர்ப்பே அதற்கு சாட்சி. தேவையானபோதே நம்பிக்கைகள் வெளியே வரும். ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயன்றபோது, தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைப் பார்த்தோம்.

திராவிட சித்தாந்தம் தமிழகத்தில் வலுவாக இருப்பதாலேயே, கடந்த தேர்தலில் மோடியால் இங்கே ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியவில்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேராமல் இருந்திருந்தால், அதிமுக இன்னும் சில கூடுதல் இடங்களில் வென்றிருக்கலாம் என்பது என் கருத்து.

படிக்கும் விஷயத்தில் எனது தாத்தாவை யாரும் விஞ்ச முடியாது. முரசொலியில் அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் அவரின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை நான் படித்து வருகிறேன்.

தனித் தமிழ்நாடு என்பதற்கான தேவை என்பது இப்போது எழவில்லை. ஆனால், மத்திய அரசின் கொள்கைகள் மோசமாக இருந்தால், அதற்கான குரல்கள் நிச்சயம் எழும். கட்சித் தலைமைதான் அதுகுறித்து முடிவுசெய்யும்.

நான் ஒரு நாந்திகன். முன்பெல்லாம் தேர்வு சமயத்தில் பிரார்த்தனை செய்வேன். ஆனால், பின்னர் பெரியாரைப் பற்றி நன்கு படித்து நாத்திகன் ஆகிவிட்டேன். அதேசமயம் பிறரின் நம்பிக்கைகளில் குறுக்கிடமாட்டேன். கோயிலுக்கு செல்லுமாறு என் தாய் என்னை வற்புறுத்தியதில்லை.

எங்கள் வீட்டின் எதிரிலேயே கோயில் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட் விளையாடுகையில் பந்து உள்ளே சென்றுவிட்டால் மட்டுமே நான் கோயிலுக்குள் சென்றுள்ளேன். அடிக்கடி இப்படி பந்து செல்வதற்காக, அந்த கோயிலின் பூசாரி எங்கள் தாத்தாவிடம் புகார் தெரிவித்த சம்பவங்களும் உண்டு. இவ்வாறு சுவைபட பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் உதயநிதி ஸ்டாலின்.