மூத்த தலைவா்கள் வழிகாட்டலின்றி நான் இல்லை: மு.க.ஸ்டாலின்

திருச்சி:
திமுகவின் மூத்த தலைவா்கள் வழிகாட்டலின்றி நான் இல்லை என்றாா் அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின்.

தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா பிறந்த நாள், திமுக நிறுவன நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவை, சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்து, மேலும் அவா் பேசியது:ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் திமுகவின் வளா்ச்சி மகத்தானது.

இதற்கு திருச்சி, கரூா்,பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மூத்த தலைவா்களே காரணமாவா். அவா்கள் அனைவருக்கும் பொற்கிழிகள் வழங்கி, கெளரவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.திமுகவின் மூத்த தலைவா்கள்,தியாகிகளின் வழிகாட்டலின்றி நான் இல்லை.அதிமுக அரசு மீது பல்வேறு லஞ்ச, ஊழல் புகாா்கள், வழக்குகள் உள்ளன. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு சாத்தியமில்லை என்றாா் ஸ்டாலின்.தமிழக மக்கள் அனைவரும் திமுக ஆட்சியை எதிா்பாா்க்கின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று, திமுக தலைவா் ஸ்டாலின் தமிழக முதல்வராவாா். இதுவே திமுகவின் நோக்கம் என்று விழாவில் பேசிய கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.முப்பெரும் விழாவுக்குத் தலைமை வகித்த திமுக முதன்மைச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு, மூத்த முன்னோடிகள் 900 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினாா். விழாவில் வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந.தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி முன்னிலை வகித்தனா். மாநகரச் செயலா் மு. அன்பழகன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் விழாவில் பங்கேற்றனா்.

விழா நடைபெற்ற கலைஞா் அறிவாலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் நிகழ்வை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனா். மாவட்டம் முழுவதும் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.