தைரியமாக ஆடுகிறேன்; ஆட்டமிழந்து விடுவேனென்று அஞ்சுவதில்லை: ஷிகர் தவான்

துபாய்: போட்டிகளில் தைரியமாக ஆடுகிறேன், உற்சாகமாக உணர்கிறேன்; ஆட்டமிழந்துவிடுவேனோ என்று பயப்படுவதில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் ஷிகர் தவான்.

இவர் அடுத்தடுத்தப் போட்டிகளில், தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில், பஞ்சாப் அணியின் கேஎல் ராகுலுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

இவர் கூறியுள்ளதாவது, “எனது மனநிலையை நேர்மறையாக வைத்துக்கொள்கிறேன். பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. நான் தைரியமாக விளையாடுகிறேன்.

ஆட்டமிழந்துவிடுவேனோ என்று பயம் கொள்வதில்லை. இந்த ஐபிஎல் தொடருக்கு தயாராவதற்கு அதிக நேரம் கிடைத்தது. அந்தவகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இதன்மூலம் எனக்கு மனதையும் உடலையும் புத்துணர்ச்சி செய்துகொள்ள அவகாசம் கிடைத்தது.

நான் வேகமாக ஓடுகிறேன், புத்துணர்வுடன் இருப்பதாக எண்ணுகிறேன். ஒரு போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டால், அந்த தன்னம்பிக்கையை அடுத்தப் போட்டிக்கும் கொண்டு செல்ல முடியும்” என்றுள்ளார் தவான்.