ஐதராபாத்,

காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானாவில் போட்டியிடுவேன் என்று  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறி உள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினரான முகமது அசாருதீனின் சொந்த மாநிலம் ஆந்திரா. அங்குள்ள ஐதராபாத் அவரது சொந்த ஊர். தற்போது ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக உள்ளது.

வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தெலுங்கானாவில்  போட்டியிட தயாராக வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் உத்தம்குமார் ரெட்டி அசாருதீனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அசாருதீன்,  காங்கிரஸ் தலைமை  விரும்பினால் தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிடத் தயார் என்றும்,   தேர்தலில் போட்டியிட அழைத்ததன் மூலம் உத்தம்குமார் ரெட்டி என்னை கவுரவப்படுத்தி உள்ளார்.  இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன விரும்புகிறதோ அதன் அடிப்படையில் முடிவு எடுப்பேன் என்று கூறினார்.

அசாருதீன்  ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, ராஜஸ்தானில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.