பெண்கள் வழிபட சபரிமலையில் புதிய கோவில் : கேரள நடிகர் யோசனை
கோழிக்கோடு
பெண்கள் வழிபட சபரிமலையில் தாம் புதிய கோவில் ஒன்றை கட்டித்தர தயாராக இருப்பதாக நடிகரும் பாஜக எம் பியுமான சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.
அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ஒட்டி கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டலபூஜையின் போது அனைத்து மகளிரும் கலந்துக் கொள்ள அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் அனுமதிப்பதை எதிர்ப்பவர்களில் ஒருவர் நடிகரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோபி ஆவார். இவர் சபரிமலையின் பாரம்பரியம் பாதுகாக்க இவ்வகை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். அவர் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
சுரேஷ் கோபி தனது உரையில், “சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக புதிய கோவில் ஒன்றை கட்ட நான் தயாராக இருக்கிறேன். தற்போதைய சர்ச்சையை தீர்க்க மாநில மற்றும் மத்திய அரசுகள் அதற்கு அனுமதி அளித்தால் நான் கட்டித்தர தயாராக உள்ளேன். எனக்கு காணிக்கை உண்டியல்க்ள் இல்லாத ஒரு புதிய கோவில் அமைக்கும் திட்டம் மனதில் உள்ளது.
விரைவில் இதற்கான விளம்பரத்தை வெளியிட உள்ளென். புதிய கோயில் விக்ரகம் நாடு முழுவதும் விரையில் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். அத்துடன் இந்த கோவிலில் பூனை செய்ய பெண்களை பூசாரியாக நியமிக்கலாம் எனவும் ஆலோசித்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.