Random image

தொண்டர்களுகாக பெண்களை கடத்த தயார் : பாஜக எம் எல் ஏ அதிரடி பேச்சு

மும்பை

தொண்டர்கள் விரும்பும் பெண்ணை கடத்தி வர தாம் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரா பாஜக எம் எல் ஏ கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர் ராம் கதம்.  இவர் பாஜகவை சேர்ந்தவர்.   நேற்று முன் தினம் இவர் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.   அதில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ராம் கதம் உரையாற்றியது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

ராம் கதம், “தொண்டர்களாகிய நீங்கள் எந்த ஒரு வேலைக்கும் என்னை தொலைபேசியில் அழைக்கலாம்.    பல இளைஞர்கள் பொதுவான வேலைகள் மட்டுமின்றி தங்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுப்பதற்கும் என்னிடம் உதவி கேட்கின்றனர்.  இளைஞர்களே, நீங்கள் உங்களின் பெற்றோருடன் என்னை வந்து சந்தியுங்கள்.  நான் உங்கள் பெற்றோருடன் பேசி அவர்களை உங்கள் காதலுக்கு சம்மதிக்க வைக்கிறேன்.

அவர்கள் சம்மதித்தால் நீங்கள் காதலிக்கும் பெண்ணை கடத்தி வந்து உங்களிடம் ஒப்படைக்க நான் தயாராக இருக்கிறேன்.   என்னுடைய மொபைல் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்” என பேசி உள்ளார்.   அத்துடன் தனது மொபைல் எண்ணையும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்த பேச்சு வீடியோ ஆக்கப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது.  இதை ஒட்டி பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  கண்டனங்கள் அதிகரிக்கவே ராம் கதம் தாம் அவ்வாறு பேசவில்லை எனவும் தமது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.