நான் எந்த நிமிடமும் பதவி விலகத் தயார் : கர்நாடக முதல்வர் அதிரடி
பெங்களூரு
தாம் எந்த நிமிடமும் பதவி விலக தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியது கர்நாடகாவில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்த மாஜத கட்சியின் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இரு கட்சிகளுக்கிடையில் சமீபத்தில் நடந்த கூட்டணி கூட்டத்தில் ஏகமனதாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையில் சுமுகமான உறவு இருப்பதாக அனைவரும் கருதி வந்தனர்.
கர்நாடக மாநில நிதி நிலை அறிக்கையில் விவசாயக் க்டன் தள்ளுபடியை முதல்வர் குமாரசாமி அறிவித்தார். அதற்கான பாராட்டு விழா பெங்களூரு அருகில் சேஷாத்ரிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய குமாரசாமி, “நான் முதல்வரானால் பல நன்மைகளை செய்வேன் என வாக்குறுதி அளித்தேன். தற்போது முதல்வராகி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். இதனால் மக்கள் மகிழ்வுடன் உள்ளனர்.
ஆனால் நான் மகிழ்ச்சியுடன் இல்லை. மக்கள் எனக்கு பெரும்பான்மை அளித்து முதல்வர் ஆக்க வில்லை என்பதே எனது மகிழ்ச்சி இன்மைக்குக்கு காரணம் ஆகும். மக்கள் நான் முதல்வராவதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. நான் எந்த நிமிடமும் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்குள் எந்த ஒரு சிக்கலும் இல்லாத நேரத்தில் அவர் இவ்வாறு பேசியது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.