சண்டிகார்: முகமது ஷமி தற்போது நிகழ்த்தியுள்ள ஹாட்ரிக் சாதனையின் மூலம், 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நிகழ்த்தப்பட்ட என்னுடைய ஹாட்ரிக் சாதனையும் நினைவுகூறப்படும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் சேட்டன் ஷர்மா.

அவர் கூறியுள்ளதாவது, “என்னைப் போன்றே வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தற்போதைய உலகக்கோப்பை போட்டியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதைப் பார்த்தவுடன், எனது நினைவுகள் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்றுவிட்டது.

நாங்கள் நியூசிலாந்திற்கு எதிரான அந்தப் போட்டியை முடித்துவிட்டு, அரையிறுதிப் போட்டிக்காக விமானம் ஏறியவுடன், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளின் முதல் பக்கத்தில்கூட என் படம் இடம் பெற்றிருந்தது. அது எனக்கான நாளாய் அமைந்தது..!

ஆனால், அதுகுறித்து இன்றைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். ஆனால், முகமது ஷமி தற்போது நிகழ்த்தியுள்ள சாதனையின் மூலம் நானும் நினைவுகூறப்படுகிறேன். இதே சாதனையை இன்னொரு இந்தியரும் முன்பே நிகழ்த்தியுள்ளார் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வார்கள்.

எனது சாதனையை, இன்னொரு சக இந்தியரும் நிகழ்த்துவது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நீண்டகாலம் கழித்து எனக்கு ஒரு துணை கிடைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் இருவருமே லெக் ஸ்டம்ப்பை பெயர்த்துள்ளோம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் சேட்டன் ஷர்மா.