மத்திய அமைச்சரின் கையை வெட்ட நினைத்தேன் : லாலு மகள் ஆவேசம்

--

பாட்னா

த்திய அமைச்சர் ராம் கிரிபால் தங்கள் கட்சியில் இருந்து விலகிய போது அவர் கையை வெட்ட நினைத்ததாக லாலுபிரசாத் மகள் மிசா பாரதி கூறி உள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா கட்சியில் இருந்த ராம் கிரிபால் யாதவ் கடந்த 2014ல் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்தார். அத்துடன் அந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி பிரமுகரும் அக்கட்சித் தலைவரின் மகளுமான மிசா பாரதியை தோற்கடித்தார். பாடலிபுத்ரா தொகுதியில் வெற்றி பெற்ற ராம் கிரிபால் யாதவ் தற்போது மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

பாட்னாவின் பிக்ராம் பகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் ராஷ்டிரிய ஜனதா தளப் பிரமுகரும் அக்கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மகளுமான மிசா பாரதி உரையாற்றி உள்ளார். அந்த உரையில் அவர் மத்திய அமைச்சர் ராம் கிரிபால் யாதவ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மிசா பாரதி, ”ராம் கிரிபால் யாதவ் எங்கள் பண்ணையில் வைக்கோல் வெட்டும் வேலை செய்துக் கொண்டிருந்தவர் ஆவார். அவரை நாங்கள் மரியாதை அளித்து கட்சியில் முக்கிய பதவிகள் அளித்தோம். அவர் எங்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதனால் அவர் கைகளை அதே வைக்கோல் வெட்டும் இயந்திரத்தால் வேட்ட வேண்டும் என நான் நினைத்தேன்” என கூறி உள்ளார்.

மத்திய அமைச்சரின் கைகளை வெட்ட் நினைத்ததாக மிசா பாரதி கூறியது பீகாரில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.