பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த அரசமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படும் மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா, தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசிகளுக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

கர்நாடக மாநில பா.ஜ. தலைவரும், 3 முறை முதல்வருமான எடியூரப்பா, பாரதீய ஜனதா வகுத்துள்ள வயது வரம்பை தாண்டிய நிலையிலும், முதலமைச்சர் பதவியேற்கும் நிலையில் உள்ளார்.

அதேசமயம், டெல்லி தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரவேண்டியுள்ளது. அதன்பிறகு, பாரதீய ஜனதாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று, சட்டமன்ற கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட வேண்டும்.

“நான் சங்பரிவார் மூத்த தலைவர்களின் ஆசிகளைப் பெறுவதற்காக இங்கே வந்தேன். டெல்லி தலைமையின் அறிவுறுத்தல்களுக்காக காத்துக் கொண்டுள்ளோம். அதைப் பெற்றவுடன், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கவர்னர் மாளிகைக்கு செல்வோம்” என்றுள்ளார் எடியூரப்பா.

உள்துறை அமைச்சரும் கட்சியின் தலைவருமான அமித்ஷா மற்றும் கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க எடியூரப்பா டெல்லி செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.