விஜயவாடா: நான் முதல்வராகவும், நரேந்திரமோடி பிரதமராகவும் இருப்பதால், நாங்கள் இருவரும் நல்லுறவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

அவர் கூறியதாவது, “மத்திய அரசிடம் நாம் எதையும் உத்தரவாக கேட்க முடியாது. மாநில அரசை நடத்திச் செல்வதற்கு அவர்களின் உதவி மிகவும் அவசியம். அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் வென்றிருக்கிறார்கள்.

நாங்கள் தனியே போட்டியிட்டோம்; அவர்களும் தனியே போட்டியிட்டார்கள். எனவே, எங்களுக்குள் எந்த மறைமுக ஒப்பந்தமும் இருக்க வேண்டிய தேவையில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை எப்படியேனும் பெறுவதே எங்களின் இலக்கு.

இந்த மாநிலத்தை ஆண்டவர்களிலேயே, சந்திரபாபு நாயுடுதான் மோசமான முதல்வர். என் தந்தை பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். அவரைவிட சிறப்பாக செயல்படுவதே எனக்கான சவால்.

எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கான சமூக நீதியை கிடைக்கச் செய்வதற்காகவே 5 முதல்வர்களை நியமித்துள்ளோம். எங்கள் அமைச்சர்களில் 60% பேர், SC/ST/OBC மற்றும் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். ஆந்திராவில் இதற்குமுன் இப்படியான ஒரு அமைச்சரவை அமைந்ததே கிடையாது” என்றார்.