யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை மிகப்பெரிய தண்டனை : அரசைச் சாடும் அமைச்சர்

டில்லி

யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பது மக்களுக்கு மிகப் பெரிய தண்டனை ஆகும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

நேற்று மத்திய அரசு சார்பில் சமுதாய வானொலிகளுக்குத் தேசிய விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட மத்திய  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விருதுகளை வழங்கினார். அத்துடன் அவர் பிரதமர் மோடி இரண்டாம் முறை அமைத்துள்ள அரசின் 75 நாட்கள் செயல்படு குறித்த “ஜன் கனெக்ட்” என்னும் புத்தகத்தை வெளியிட்டார்.

பிரகாஷ் ஜவடேகர் தனது உரையில், “விதி எண் 370 நீக்கம் குறித்து மோடி அரசு எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். காஷ்மீர் மக்களுக்கு நாட்டின் மற்ற பகுதி மக்களைப் போல் முன்னேற வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இனி அவர்களுக்கு இட  ஒதுக்கீடு, கல்வி உரிமை, மற்றும் அனைத்து உரிமைகளும் கிடைத்து அவர்களால்  முன்னேற முடியும். அவர்கள் விரைவில் நாட்டின் மற்ற பகுதி மக்களை விட அதிக அளவில் முன்னேற்றம் அடைவார்கள்.

இதனால் மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டது உண்மைதான். கடந்த 22 நாட்களாகக் காஷ்மீர் மாநிலத்தில் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா? யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை , யாருடனும் பேச முடியாத நிலை, மற்றும் எவ்வித தொலைத் தொடர்பு சாதனமும் இல்லாமல் இருப்பதே மிகப் பெரிய தண்டனை ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தில் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகளை  முடக்கியதற்கு நாடெங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கருத்து தெரிவித்தது மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.