டில்லி

தாம் காந்தி குடும்பத்தில் பிறந்த வதேரா குடும்பத்துப் பெண் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி அரசியலில் நுழையும் போதே அவரும் அவர் பாட்டி இந்திரா காந்தியைப் போல் பல விமர்சனங்களை கடக்க வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவர் காங்கிரசில் தற்போது தான் பதவி அளிக்கப்பட்டுள்ளதால் அந்த விமர்சனங்கள் உடனடியாக வராது எனவும் சிலர் கூறினர். ஆனால் அவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுகின்றன என்பதே உண்மையாகும்.

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தன் மீதுள்ள பொருளாதாரக் குற்றங்களை நீர்த்துப் போகவே பிரியங்காவை அரசியலில் புகுத்தியதாக பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதை பொய் என கூறுவதைப் போல் ராபர்ட் வதேரா அவராகவே அமலாக்கத்துறை விசாரணைக்கு தன்னை அழைக்குமாறு தெரிவித்தார்.

நேற்று நடந்த விசாரணை ராபர்ட் வதேரா வேண்டுகோளுக்கு இணங்க நடந்தது என்பதும் அமலாக்கப்பிரிவு அழைப்பின் பேரில் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவினர் மட்டுமின்றி ஒரு சில தொலைக்காட்சிகளும் பிரியங்கா காந்தி என குறிப்பிடாமல் பிரியங்கா வதேரா எனவே குறிப்பிடுவது மற்றொரு விமர்சனமாகும். இதன் மூலம் அவர் இந்திரா காந்தி குடும்பத்தவர் இல்லை என அவர்கள் தெரிவிக்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கணவருடன் அமலாக்கத்துறை அலுவலகம் வந்த பிரியங்காவிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது.   அதற்கு அவர் ”நான் காந்தி குடும்பத்தில் பிறந்த பெண். தற்போது வதேரா குடும்பத்துப் பெண். ராபர்ட் வதேரா எனது கணவர். அதனால் அவர் என் குடும்பத்தினர். நான் இரு குடும்பத்தையும் சேர்ந்தவள்” என சிரித்த படி கூறினார்/