ஸ்ரீநகர்:

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்கள், மாவட்டங்களில் பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த சிறுமிக்காக வாதாட எந்தவொரு வழக்கறிஞரும் முன்வராத நிலையில்,  வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் என்பவர் இந்த வழக்கை கையாளப்போவதாக கூறினார்.

இதன் காரணமாக அவருக்கு பலமுனைகளில் இருந்து மிரட்டல் வருவதாகவும், தானும் கொலை செய்யப்படலாம், தன்னை வன்புணர்வு செய்து கொலை செய்வோம் என சிலர் மிரட்டி வருகின்றனர் என வழக்கறிஞர் தீபிகா கூறி உள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உட்பட 8பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடியும் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்காக ஆஜராக உள்ள தீபிகா ராஜாவத் தனக்கு கொலைமிரட்டல் வருவதாகவும்,  நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம். நான் கொல்லப்படலாம் என்று தெரிவித்து உள்ளார். மேலும், தன்னை மிரட்டுபவர்கள் என்னை வன்புணர்வு செய்யப்போவதாகவும், உன்னை  மன்னிக்க மாட்டோம் எனவும் கூறுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், தான் பார் கவுன்சில் மெம்பராக இல்லாத நிலையில்,  ஜம்மூ காஷ்மீர் பார் அசோசியேசன் தலைவரால் மிரட்டப்பட்டேன், தன்னை   இந்த வழக்கில் இருந்து விலகுமாறு பார் கவுன்சில் தலைவர் தெரிவித்தாகக் கூறியிருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி கொலை வழக்கில் ஆஜராக உள்ள தீபிகாவுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது