சென்னை:

மறைந்த எழுத்தாளர் பாலகுமரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் கமல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியையும், அரசியல் பயணத்தையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து மேற்கொள்வேன்’’ என்று தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியையும், முழு நேர அரசியல் பயணத்தையும் எப்படி மேற்கொள்வீர்கள்? என்ற கேள்விக்கு கமல் இவ்வாறு பதிலளித்தார். முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலின் போது கமல் கூறுகையில்,‘‘ கைவசம் எனக்கு 2 படங்கள் மட்டுமே உள்ளன. அதை முடித்த பின்னர் வேறு படங்களுக்கு ஒப்பந்தம் செய்யமாட்டேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

பின்னர் இதை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்ட கமல், ‘‘திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். முழு நேர அரசியலுக்குள் நுழைந்த பின்னர் தொடர்ந்து நடிப்பதா? வேண்டாமா? என்பதை நான் முடிவு செய்வேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வந்துவிடுவீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘நான் தேர்தலில் தோல்வி அடைவேன் என்று நினைக்கவில்லை. அதற்கான நிலை ஏற்படும் போது பார்ப்போம்’’என்றார்.

கமல் முழு நேர அரசியல்வாதியாக மாறிய பின்னர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் விஜய் டிவி.யில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்துவது உறுதியானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தை கமல் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அப்போது கமல் அரசியல் பயணத்தை தொடங்கவில்லை.

ஆனால் தற்போது மக்கள் நீதி மையம் கட்சியை கடந்த பிப்ரவரி 21ம் தேதி தொடங்கியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போகீறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.