மன்னிப்பு கேட்க முடியாது!: தமிழக அரசுக்கு ஏ.ஆர். முருகதாஸ் பதில்

ரசின் திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி வெளியானது.  கதைத் திருட்டு, புகைப்பிடிக்கும் காட்சி, அதிகவிலையில் டிக்கெட் என்று பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து படம் வெளியான பிறகு, இன்னொரு சர்ச்சை வெடித்தது.

அரசு வழங்கும் இலவச பொருட்களை தீயில் வீசி எரிந்து எரிப்பது, வில்லி கதாப்பாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்பதை  சூட்டியது உள்ளிட்ட சில காட்சிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து  அக்காட்சிகள் நீக்கப்பட்டன. சில காட்சிகளில் ஒலி அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 9 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்புக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்வதோடு அரசை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசின் வாதத்திற்கு இன்று நீதிமன்றத்தில் முருகாதாஸ் பதிலளித்தார். அப்போது, அரசின் திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், “இனி வரும் படங்களில் அரசின் திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்க முடியாது. படத்தில் காட்சிகளை அமைப்பது எனது கருத்து சுதந்திரம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து முருகதாஸுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என தமிழக அரசு தரப்பு வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து முருகதாஸை கைது செய்ய விதித்த தடையை மேலும் 2 வாரம் கால நீட்டித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி