லாகூர்: கார்கில் போரில் பங்கேற்க விரும்பிய காரணத்தால், ரூ.1.71 கோடி மதிப்பிலான கவுண்டி ஒப்பந்தத்தை ரத்துசெய்ததாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர்.

பொழுதுபோகாத காரணத்தால், பலரும் எதையெ‍தையோ பேசி வருகின்றனர். அந்த லிஸ்டில் ஷோயப் அக்தர் இடம்பெற்று ரொம்ப நாளாகிவிட்டது. இந்நிலையில், கார்கில் போரில் பங்கேற்கும் விருப்பத்திற்காக, தனது கிரிக்கெட் ஒப்பந்தத்தை ரத்துசெய்துள்ளதாக கூறியுள்ளார் அக்தர்.

அவர் கூறியதாவது, “கவுன்டி அணியான நாட்டிங்ஹாமுடன் 1,75,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1.71 கோடி ரூபாய்) ஒப்பந்தம் செய்திருந்தேன். 2002ம் ஆண்டு மற்றொரு பெரிய அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்தேன். கார்கில் போர் நடந்ததால், நான் இரண்டையும் ரத்து செய்தேன். லாகூருக்கு வெளியே நான் நின்றிருந்தபோது, ராணுவ ஜெனரல் ஒருவர் என்ன செய்கிறாய்? என என்னிடம் கேட்டார். போர் துவங்கப்போகிறது; நாம் அனைவரும் சேர்ந்தே இறப்போம் நான் அவரிடம் கூறினேன்.

நான் இரு முறை கவுன்டி கிரிக்கெட் போட்டிகளை நிராகரித்ததால், கவுன்டி அணிகள் அதிர்ச்சி அடைந்தன. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. காஷ்மீரில் இருக்கும் எனது நண்பர்களை அழைத்து, நான் போராட தயாராக இருக்கிறேன் என கூறினேன்.

இந்தியாவில் இருந்து வந்த விமானங்கள், எங்களது சில மரங்களை சாய்த்ததானது, எங்களுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இதனால் எனது மனம் மிகவும் கஷ்டப்பட்டது. இப்போது நாங்கள் மரங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அன்று நான் கண்விழித்து பார்த்தபோது, எனக்கு மயக்கம் வந்துவிட்டது. என் மனைவி அமைதியாக இருக்கும்படி என்னிடம் கூறினார்” என்றுள்ளார் அக்தர்.