கபில் மிஸ்ரா,  அனுராக் தாக்குர் உள்ள கட்சியில் நான் இருக்க மாட்டேன் : பாஜகவில் இருந்து விலகிய வங்க நடிகை 

கொல்கத்தா

டில்லி வன்முறை தாக்குதலைத் தூண்டியதாக கபில் மிஸ்ரா மற்றும் அனுராக தாக்குர் மீது குற்றம் சாட்டி வங்க நடிகை சுபத்ரா முகர்ஜி பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.   நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த வன்முறை வெடித்ததற்கு பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் போன்றோரின் பேச்சுக்களே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆயினும் அவர்கள் மீது பாஜக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் நாடெங்கும் கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.   மேற்கு வங்கத்திலும் இந்த எதிர்ப்பு அலையின் தாக்கம் எதிரொலித்துள்ளது.  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபத்ரா முகர்ஜி என்னும் நடிகை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற நடிகை ஆவார்.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் உள்ளார்.

சுபத்ரா முகர்ஜி நேற்று பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.  இது குறித்து அவர், “நான் கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவின் செயல்பாட்டில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்தேன்.  ஆனால் சமீப காலமாக பாஜக சரியான பாதையில் செலவில்லை என்பதை அறிந்தேன்.  பாஜக மதச்சார்புக் கொள்கை மற்றும் வெறுப்பு உணர்ச்சியுடன் செயல்படுவதை உணர்ந்து நான் யோசித்து பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தேன்.

நான் எனது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநிலத்தலைவர் திலிப் கோஷ க்கு அனுப்பி உள்ளேன்.  அது ஏற்கப்படாவிட்டால் நான் நேரில் சென்று ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளேன்.   டில்லியில் தற்போது ஏராளமானோர் கொல்லப்பட்டு எக்கச்சக்கமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.   இந்த கலவரம் மக்களைப் பிளவு படுத்தும்.   அனுராக் தாக்குர் மற்றும் கபில் மிஸ்ரா ஆகிய தலைவர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கட்சியில் என்னதான் நடக்கிறது?   டில்லி வன்முறைக் காட்சிகளால் நான் முழுவதுமாக ஆடிப் போய் விட்டேன்.   வன்முறையை தூண்டும் ப்டி பேசும் தலைவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.   அத்தகைய தலைவர்கள் உள்ள கட்சியில் நான் இருக்க மாட்டேன்.  அதனால் தான் நான் ராஜினாமா செய்துள்ளேன்.

அக்கம் பக்க நாடுகளில் துன்புறுத்தப்பட்டு இங்கு வருவோருக்குக் குடியுரிமை அளிப்பது மிகவும் அருமையான முடிவாகும்.  ஆனால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறேன் என்னும் பெயரில் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையில் நீங்கள் ஏன் விளையாடுகிறீர்கள்?  தற்போது திடீரென நமது குடியுரிமையை ஏன் நிரூபிக்க வேண்டும்?

நான் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்.  அவர்கள் மனிதத் தன்மையைக் கொன்று விட்டு அரக்கத்தன்மையை உருவாகுவதாக எண்ணுகிறேன்.  இந்த வன்முறை நாட்டின் தலைநகரில் மட்டுமின்றி நாடு முழுமைக்கும் அமைதியின்மையை உண்டாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.