கர்நாடக சபாநாயகரை நிர்பந்திக்க என்னால் முடியாது : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டில்லி

ர்நாடக சபாநாயகரை முடிவு எடுக்க தாம் நிர்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மறும் மஜத உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா குறித்து கர்நாடக மாநில சபாநாயகர் முடிவு அறிவிக்கவில்லை. அதை ஒட்டி அதிருப்தி உறுப்பினர்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிருப்தி உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில சபாநாயகரை கேட்டுக் கொண்டார். சபாநாயகர் தம்மால் உடனடியாக முடிவு எடுக்க முடியாது எனவும் கால அவகாசம் தேவை எனவும் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இது குறித்த விசாரணையில் அதிருப்தி உறுப்பினர்கள் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் ரோத்தகி அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் பற்றி முடிவு எடுக்காது சபாநாயகர் காலம் தாழ்த்தி வருவதாகவும் உடனடியாக முடிவு எடுக்க சபாநாயகரை நீதிபதி சந்தித்து வற்புறுத்த வேண்டும் எனவும் தனது வாதத்தில் தெரிவித்தார்.

இதற்கு ரஞ்சன் கோகாய், “என்னால் சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. நான் இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகருக்கு உத்தரவிட்டு முடிவு எடுக்கக் கோரி நிர்பந்திக்க என்னால் முடியாது.” என பதில் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பதில் கர்நாடக அதிருப்தி உறுப்பினர்கள் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி