சசிதரூர் பேசும் ஆங்கிலம் எனக்கு புரியவில்லை : பியூஷ் கோயல்

டில்லி

த்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமக்கு காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என கூறி உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஆவார்.  இவருடைய ஆங்கில அறிவும் சுத்தமான உச்சரிப்பும் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.  இவர் அரசியலில் இணையும் முன்பு ஐநா சபையில் பணி புரிந்தவர் ஆவார்.   அப்போது சசி தரூர் ஐநா சபை பொதுச் செயலர் பதவிக்கு போட்டி இட்டவர் ஆவார்.

நேற்று தப்பிச் சென்ற பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  அப்போது சசி தரூர், “அரசு சொல்வதற்கும் நடந்துக் கொள்வதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.   பிரதமர் மோடி முதலில் தாம் ஒரு காவல்காரராக இருந்து ஊழலை ஒழிப்பேன் எனக் கூறினார்.   ஆனால் அவர் வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடியுடன்  ஒரு விழாவில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்”என தெரிவித்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் புயூஷ் கோயல், “உறுப்பினர் சசி தரூர் பேசும் வெளிநாட்டு உச்சரிப்பு ஆங்கிலத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை” என கிண்டலாக கூறினார்.  அதற்கு  மற்றொரு கேரள மாநில பாராளுமன்ற உறுப்பினரான பிரேமசந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர், “ஒரு உறுப்பினரை இவ்வாறு விமர்சிப்பது அமைச்சருக்கு அழகல்ல” என கண்டனம் தெரிவித்தார்.  இதற்கு பாராளுமன்றத் துறை அமைச்சர் அனந்தகுமார் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயன்றார்.  ஆனால் பிரேமசந்திரன் ஒரு உறுப்பினரைக் குறித்து அமைச்சர் விமர்சிக்கும் போது மற்றொரு உறுப்பினருக்கு அதை எதிர்க்க உரிமை உள்ளதாக பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.