ராஞ்சி: 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தான் ரன்அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம் என்று பழையதை நினைவுகூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி.

உலகக்கோப்பை அரையிறுதியில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலியின் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்தை சந்தித்தது.

நியூசிலாந்து நிர்ணயித்த எளிய இலக்கான 239 ரன்களை விரட்டிய இந்திய அணியின் துவக்க மற்றும் நடுகள வீரர்கள் மோசமாக சொதப்பினர். இறுதியில், ஜடேஜாவும் தோனியும் நிலைத்து நின்று, அணியை மீட்டனர்.

இறுதியான சில ஓவர்களில் தோனி களத்தில் நின்றால் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 49வது ஓவரில் அவர் நியூசிலாந்து வீரர் கப்டிலின் நேரடி த்ரோவில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம் அனைத்து ஆசைகளும் நிராசைகள் ஆயின.

தற்போது அதுகுறித்து நினைவுகூர்ந்துள்ள தோனி, “எனது பேட்டிற்கும் கிரீசுக்கும் 2 இன்ச் இடைவெளி மட்டுமே இருந்தது. நான் டைவ் அடித்திருந்தால் அவுட்டிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால், ஏன் அந்த வாய்ப்பு நழுவிப்போனது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது” என்றுள்ளார்.