கர்நாடக முதல்வர் குமாரப்பாவை சந்திக்க பெங்களூரு வந்துள்ள மக்கள் நீதி மய்ய தலைர் கமல்ஹாசன், தான் சினிமாவுக்காக முதல்வரை சந்திக்க வரவில்லை என்று தெரிவித்து ரஜினியை சீண்டியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை எதிர்த்து ரஜினி கருத்து கூறியதாக தெரிவித்து அவரது காலா திரைப்படத்தை அம்மாநிலத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட வெறியரான வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.  அம்மாநில பிலிம்சேம்பரும், காலாவை திரையிட தடை வித்தது.

கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியும், “காலா படம் கர்நாடகாவில் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை” என்றார்.

இதையடுத்து ரஜினி பெங்களூரு சென்று பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு தரப்பினரை சந்தித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் பேசுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார்.

அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் சினிமாவுக்காக முதல்வரை சந்திக்க வரவில்லை. காவிரி குறித்து பேச வந்திருக்கிறேன்” என்று மறைமுகமாக ரஜினியை சீண்டினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி கலவரம் சமூகவிரோதிகலால் ஏற்பட்டது என்று ரஜினி கூறியது குறித்து கேட்டதற்கு, “தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடவே செய்வார்கள். போராடுபவர்கள் சமூகவிரோதி என்றால் நானும் சமூகவிரோதிதான்” என்றும் ரஜினிக்கு பதிலடி கொடுத்தார்.