என் மகனைக் கொன்ற பாஜகவை எதிர்க்க பணம் தேவையில்லை :ராதிகா வெமூலா

டில்லி

றைந்த ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமூலாவின் தாய் தாம் யாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு பாஜகவை எதிர்க்கவில்லை என கூறி உள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமூலா இரண்டாம் ஆண்டு முனைவர் கல்வி பயின்று வந்தார்.  இவர் அம்பேத்கார் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர் ஆவார்.   பாஜக அரசை எதிர்த்து இவர் பல கூட்டங்கள் நடத்தி உள்ளார்.   இவர் 2016ஆம் வருடம் ஜனவரி மாதம் 17ஆம் தேதி தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.   அவரது மரண சர்ச்சை இன்றும் தொடர்ந்து வருகிறது.

ரோகித் வெமூலாவின் தாயார்  ராதிகா வெமூலா தனது மகனின் மரணத்துக்கு பிறகு பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசி வந்தார்.   இந்நிலையில் ராதிகா வெமுலாவுக்கு வீடு கட்டிக் கொள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 20 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்ததாகவும்   அதன் முதல் தவணையாக அளிக்கப்பட்ட காசோலை வங்கியில் இருந்து திருப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதை ஒட்டி பாஜக அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பாஜகவுக்கு எதிராக பேசவும் பேரணிகளில் கலந்துக் கொள்ளவும் ராதிகா வெமுலாவுக்கு ரூ. 20 லட்சம் பணம் அளிப்பதாக கூறி உள்ளது.   ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.   இது கண்டனத்துக்குரியது.” என தெரிவித்தார்.   இது குறித்து ராதிகா வெமுலாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ராதிகா வெமுலா, “பாஜக கூறியது சுத்தப் பொய்.  நான் இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துள்ளேன்.  நான் பாஜகவை எதிர்ப்பதற்கு பணம் வாங்கியதாக கூறுவது தவறு.   என்னைப் போல ஒரு தலித் பெண்மணி பணத்துக்காக எதையும் பேசுவார் என சொல்வது தவறில்லையா?

நான் பணம் வாங்குபவள் அல்ல.   மேலும் என் மகனைக் கொன்ற பாஜகவை எதிர்க்க நான் பணம் வாங்க தேவை இல்லை. எனது 25 வயது மகனை நான் பாஜகவால் இழந்தேன்.   அதனால் நான் எப்போதும் பாஜகவை எதிர்ப்பேன்.  என்னையே அவர்கள் கொன்றாலும் எதிர்ப்பேன்.

நான் முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காசோலை வங்கியில் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறியது உண்மைதான். வங்கியால் திருப்பி அனுப்பப்பட்ட காசோலையை மாற்றி தருவதாகவும்  அவர்கள் தருவதாக சொன்ன பாக்கி ரூ.10 லட்சத்தையும் விரைவில் தருவதாகவும் கூறி உள்ளனர்.    நான் வாங்க உள்ள வீடு தயாராக உள்ளதால் விரைவில் அவர்கள் பணம் அளிப்பதாக கூறி உள்ளனர்.   அவர்கள் என்றும் என்னுடன் துணை இருப்பதாக கூறி உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.