நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்கே தெரியாது: தோனி
லண்டன்: தனக்கு இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் கிடையாது எனவும், ஆனால் பலர் நான் உடனே ஓய்வுபெற வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி.
உலகக்கோப்பை தொடரின் பல ஆட்டங்களில் மந்தமாக ஆடிவரும் தோனி மீது விமர்சனங்கள் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன. அவர் விரைவில் ஓய்வுபெறுவதே நல்லது என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, “எனக்கு உடனடியாக ஓய்வுபெறும் எண்ணம் கிடையாது. நான் எப்போது ஓய்வுபெறுவேன் என்று எனக்கேத் தெரியாது. ஆனால், நான் உடனே, அதாவது இலங்கைப் போட்டிக்கு முன்னதாகவே ஓய்வுபெற்றுவிட வேண்டுமென பலர் விரும்புகின்றனர்.
நான் இந்திய கிரிக்கெட் அணியில் யாரையுமோ அல்லது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் யாரையுமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை” என்றார்.
தோனியைப் பற்றி எத்தனை விமர்சனங்கள் புறப்பட்டாலும், கேப்டன் விராத் கோலி அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வீரர் லசித் மலிங்காவும் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.