கொல்கத்தா:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை நான் நம்பவில்லை, இதன்மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இருக்க வேண்டும் என்றும்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.   பெரும்பாலான ஊடகங்கள், பாஜக ஆட்சி அமைக்கும் என்று செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று மம்தா பானர்ஜி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நான் நம்பவில்லை. இதுபோன்ற கருத்துகணிப்புகள் வதந்திகள் மூலம், மேலும் ஆயிரம் வாக்குபதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறலாம். இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். ஒன்றுப்பட்டால் வெற்றி நிச்சையம் என தளராமல் இருப்போம்” என தெரிவித்துள்ளார்.