“ஏ.சி. அறையில் உட்கார்ந்து அரசியல் செய்ய விரும்பவில்லை” மனம் திறந்த ஊர்மிளா

 

‘இந்தியன்’ தமிழ் படத்தில் நடித்த ஊர்மிளா ஏராளமான இந்திப்படங்களிலும் நடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொஞ்ச காலம் பணியாற்றிய அவர், கடந்த மக்களவை தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளராக வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

தேர்தலில் தோற்றதால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த அவர் அண்மையில் சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

ஆளுநர் கோட்டாவில் இருந்து அவரை எம்.எல்.சி, பொறுப்பில் நியமிக்க சிவசேனா பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், நடப்பு அரசியல் குறித்து ஊர்மிளா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார்.

“பதவியை எதிர்பார்த்து நான் சிவசேனா கட்சியில் சேரவில்லை” என குறிப்பிட்ட அவர் “எனக்கு பதவி கிடைக்கவில்லை என்றாலும் சிவசேனா வளர்ச்சிக்கு உழைப்பேன்” என தெரிவித்தார்.

“ஏ.சி. அறைக்குள் ‘ஹாயாக’ அமர்ந்து கொண்டும், ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்தும் அரசியல் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என கூறிய ஊர்மிளா, “ஜாதி, மத, மொழி வேறுபாடுகளை கடந்து சேவையாற்றி மக்கள் தலைவராக வர வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

– பா. பாரதி