லண்டன்: எங்களால் முடிந்தளவிற்கு நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால், நினைத்தது நடக்கவில்லை. எனக்கு 5 வயது அதிகமாகிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் கேட்பன் டூ பிளெஸ்ஸிஸ்.

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவர் இதை தெரிவித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி வெறும் 242 ரன்களே எடுத்த நிலையில், நியூசிலாந்து அணி, அந்த இலக்கை கடந்துவிட்டது.

நியூசிலாந்தின் வில்லியம்சன் மற்றும் காலின் டி கிரான்ட்ஹோம் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி, தங்கள் அணியை வெற்றிபெற வைத்தனர். இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெறும் தென்னாப்பிரிக்காவின் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம்.

இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், “எங்களின் வீரர்கள் மனதளவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு 5 வயது அதிகமாகிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனது உடல் மிகவும் சோர்வடைந்துவிட்டது.

ஒரு கேப்டனாக எனது வீரர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டேன். அவர்களும், தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயல்பட்டனர். எனவே, இதற்குமேல் செய்வதற்கு எதுவுமில்லை” என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி முக்கியமான கட்டத்தில், ஃபீல்டிங்கில் சொதப்பியது என்பதையும் மறுக்க முடியாது.