“இந்திய அணியில் இடம் கிடைத்ததை கனவுபோல் உணர்ந்தேன்” – வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி!

அபுதாபி: இந்திய டி-20 அணியில் இடமளிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், தான் கனவுபோல் உணர்ந்தாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தற்போதைய ஐபிஎல் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி.

இந்தாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை, ஆஸ்திரேலிய நாட்டிற்கு நீண்ட பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில், டி-20 பிரிவில் இடம்பெற்றுள்ளார் வருண் சக்ரவர்த்தி.

இதுகுறித்து பேசியுள்ள அவர் கூறியுள்ளதாவது, “கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராகவே நான் முதலில் பயிற்சியெடுத்தேன். ஆனால், விக்கெட் கீப்பிங் பணிக்கு அதிக போட்டிகள் இருந்த காரணத்தால், கடந்த 2018ம் ஆண்டு சுழற்பந்து வீச்சு பயிற்சியை மேற்கொள்ள தொடங்கினேன்.

எனக்கு ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நண்பர்கள் கூறியதைக் கேட்டவுடன், எனக்கு உண்மையில் கனவுபோல் இருந்தது அந்த செய்தி! எனக்கா வாய்ப்பு..? என்று கேட்டுக்கொண்டே இருந்தேன் எனக்குள்!

நான் பங்குபெறும் எந்த அணியாக இருந்தாலும், எனது பங்களிப்பை சிறப்பாக வழங்குவதுதான் எனது லட்சியம். எனவே, இந்திய அணியிலும் சிறப்பாக செயல்படுவேன். என்னை சுற்றியிருப்போர் கொடுக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானது” என்றுள்ளார் அவர்.