பெங்களூரு: ஒருநாள் போட்டியிலிருந்து கடந்த 1998ம் ஆண்டு, தான் நீக்கப்பட்டபோது, பாதுகாப்பற்று உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ‘சுவர்’ ராகுல் டிராவிட்.
அவர் கூறியுள்ளதாவது, “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சில கட்டங்களில் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்திருக்கிறேன். 1998-ல் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட சூழலை இதற்கு உதாரணமாக கூறலாம். ஓராண்டு அணியில் இடம்பெறாமல் மீண்டும் போராடிதான் அணிக்குள் நுழைய முடிந்தது.
ஒரு டெஸ்ட் வீரராகவே பயிற்சியளிக்கப்பட்டு வளர்ந்த நான், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நான் சரிப்பட்டு வருவேனா? என்பது போன்ற பாதுகாப்பற்ற நிலை இருந்தது. அதாவது பந்தை தரையில்தான் ஆட வேண்டும்; தூக்கி அடிக்கக் கூடாது என்று வளர்க்கப்பட்டவன் நான்.
இதனால், ஒருநாள் போட்டிகளில் சோபிக்கும் அளவிற்கு, நம்மிடம் திறமை இருக்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்தன” என்றுள்ளார் டிராவிட்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும், தனித்தனியே 10,000 ரன்கள் கடந்தவர் என்ற சாதனையை, சச்சினுடன் சேர்ந்து படைத்திருப்பவர் ராகுல் டிராவிட் மட்டுமே.