லண்டன்: ஆஃப்கன் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், தான் ஹாட்-ரிக் எடுத்ததற்கு முக்கிய காரணம் முன்னாள் கேப்டன் தோனியின் ஆலோசனைதான் என்று கூறியுள்ளார் இந்தியாவின் முகமது சமி.

இப்போட்டியில் கடைசி ஒவரை வீசினார் முகமது சமி. அப்போது ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரின் முதல் பந்து பவுண்டரி லைனுக்கு விரட்டப்பட்டது. அந்நேரத்தில், சமியை அழைத்து ஏதோ ஆலோசனை கூறினார் தோனி. ஆஃப்கன் அணியிடம் அப்போது 3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்தது.

இதனையடுத்து போட்ட இரண்டாவது பந்தை, ஆஃப்கன் வீரர் சிக்சருக்கு தூக்க அது கேட்சானது. பின்னர், அவர் அடுத்தடுத்து வீசிய 2 பந்துகளும் ஸ்டம்புகளை தகர்த்தன. இதனையடுத்து, உலகக்கோப்பை போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஷமி.

அந்த ஓவரில் யார்க்கர் பந்துகளை வீசுமாறு தோனி ஆலோசனை கொடுத்ததாகவும், அதை நடைமுறைப்படுத்தியதாலேயே இந்த வெற்றி சாத்தியமானதாகவும் குறிப்பிட்டார் ஷமி.

கடந்த 1987ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த உலகக்கோப்பை போட்டியில், சேட்டன் ஷர்மா முதன்முதலாக இந்தியாவின் சார்பில் ஹாட்ரிக் எடுத்தார். 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில், இதுவரை மொத்தம் 10 முறை ஹாட்-ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.