எம்ஜிஆர் புகழைப் பரப்ப சொந்தப்பணம் ரூ.50 கோடி: சைதை துரைசாமி அறிவிப்பு

எம்ஜிஆர் புகழைப் பரப்ப தனது சொந்தப்பணம் ரூ.50 கோடியை அளிப்பதாக சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று (ஜூலை 15) பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் பேசுகையில், “கர்ணனைப் போன்று கொடை வள்ளலாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். அவரது ஆட்சி, தமிழகத்தின் பொற்காலமாக திகழ்ந்தது. அக்காலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. எம்ஜிஆர் வகுத்த கொள்கைகள் பல்வேறு மாநில அரசுகளால் பின்பற்றப்பட்டுள்ளன. சத்துணவுத் திட்டம் போன்றவை இதற்கு உதாரணமாக இருக்கின்றன.

அடித்தட்டு மக்கள் மற்றும் தொழிலாளர்களின் தலைவராக எம்.ஜி.ஆர். விளங்கினார். . இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த நேரத்தில்  ரூ.50 ஆயிரத்தை போர் நிதியாக  எம்ஜிஆர் வழங்கினார். இன்றைய தேதியில் அதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும்.  எம்ஜிஆரின் உதவியால் கல்வி கற்றோர் எண்ணற்றோர் உண்டு.

எம்ஜிஆர் மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளுடன் நல்லுறவைப் பேணிக் காத்தார்.  இலங்கை தமிழர் பிரச்சினையில் அமைதி நிலவவேண்டும் என்று அவர் விரும்பினார். மக்களின் இதயங்களிலும் நினைவிலும் எம்ஜிஆர் தொடர்ந்து வாழ்வார்” என்று ஆளுநர் பேசினார்.

உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் சென்னை முன்னாள்  மேயருமான சைதை துரைசாமி பேசுகையில், “ராமபிரான்  அயோத்தியில் முடிசூட்டிக்கொண்ட போது, தாங்களே முடிசூட்டிக்கொண்ட மகிழ்ச்சி அங்கிருந்த மக்களுக்கு ஏற்பட்டதாம். அதுபோல், இந்த மாநாடு எம்ஜிஆரின் தொண்டர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்துள்ளது.

தான் முதல்வராவதற்கு எம்ஜிஆர் காரணம் என்று பேரறிஞர் அண்ணாவே கூறியிருக்கிறார்.

உன்னால் உயர்வடைந்த என் போன்றோர் உள்ளமெல்லாம் மகிழ வேண்டும் என்று எம்ஜிஆரால் முதல்வர் ஆனது குறித்து கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆனவர் எம்ஜிஆர். தமிழக அரசியலில் மாற்றத்தை,  , புரட்சியை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். ஐந்து முதல்வர்களை உருவாக்கி வரலாறு கண்ட மாமனிதர் அவர். எம்ஜிஆர் யாருக்கெல்லாம் பதவி அளித்தாரோ,  அவர்கள் எல்லாம் விசுவாசிகளாக இல்லை. ஆனால், பொதுமக்களும் தொண்டர்களும் அவரை இதய தெய்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தனது திரைப்படங்களைப் பார்த்து யாரும் கெட்டு விடக்கூடாது என்பதற்காகத் தனது திரைப்படத்தில், சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விசயங்களை எந்தவொரு சூழ்நிலையிலும் இடம் பெறக் கூடாது என உறுதியோடு இருந்தவர் எம்.ஜி.ஆர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை மத்திய அரசின் ஆய்வில் இருக்கிறது. ஆளுநர் வாயிலாக தற்போது மத்திய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும்.

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். எம்ஜிஆர் பெயரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும். எம்ஜிஆரின் பிறந்த நாளை மனிதநேய நாளாகக் கொண்டாட வேண்டும்.

எம்ஜிஆரின் புகழையும் பெருமையையும் காக்க வேண்டுமானால் அதற்கு சேவை செய்திட பெரும் நிதி வேண்டும். அதற்காக நான் ரூ.50 கோடியை இந்த அமைப்புக்குத் தர இருக்கிறேன். எனது குடும்ப சொத்தை விற்று இந்தத் தொகையை தர இருக்கிறேன். பிறரிடமும் நன்கொடை பெறப்படும்” என்று சைதை துரைசாமி கூறினார்.