Random image

‘தப்பா பேசிட்டேன்…. என்னை மன்னிச்சிருங்க:’ கருணாஸ் ‘சரண்டர்’

சென்னை:

போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தை  ஒருமையில் பேசியதற்காக நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏதோ ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் பேசிவிட்டதாக கூறி மன்னிப்பு கோரி உள்ளார்.

கடந்த 16ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசிய படம்

கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கருணாஸ் கட்சியினரின்  ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, காவல்துறை துணை கமிஷனர்அரவிந்தை கடுமையாக ஒருமையில்  விமர்சனம் செய்துள்ளார். நீ கொலை கூட பண்ணு, அதனை சொல்லிட்டு பண்ணு. ஒரு நியாய தர்மம் இருக்க வேண்டும். என் ஜாதிகாரன் மேல கைய வச்சா கைய கால உடைச்சிருவேன். உன்னுடைய சட்டைய கழட்டிட்டு வா, நீயா நானானு பாத்துருவோம் என்று  கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் யூனிபாமை கழற்றி வைத்து விட்டு நேருக்க நேர் வா பார்த்துவிடுவோம்… தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கூட கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று சரமாரியாக பேசினார்.

இதுகுறித்து இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சென்னை காவலர் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,  எங்கள் அமைப்பு நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரி அரவிந்தனைக் கண்டித்துதான் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில உளவுத்துறை செயலாளர் உட்பட போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கபடவில்லை. இதனால்தான் அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகள் குறித்து எதுவும் பேசவில்லை.

`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் பேசிய பிறகுதான் கடந்த 6 மாதங்களாக எனக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்.  அதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்திடம் 13 புகார்களைக் கொடுத்துள் ளேன். சட்டசபையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகப் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

எனக்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கிவிட்டார்கள். இந்த கோபத்தினால்தான் நான் பேசிவிட்டடேன்.  நான் பேசியதன்மூலம் அதிகாரிகள் மனம் வருத்தமடைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.”  ஏதோ, ஆதங்கத்திலும், ஆத்திரத்திலும் பேசிவிட்டேன்/. என்னை மன்னிச்சிருங்க…  என்று மன்னிப்பு கோரி உள்ளார்.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ் நேற்று பெங்களூர் சென்று சசிகலாவை டிடிவியுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.